ஆசிரமத்தின் முன்பிருந்த அரசமரத்தடியில் வேத வியாசர் தனது சீடர்களுடன் அமர்ந்திருந்தார்.
துறவறம் முலம் மக்கள் சேவை செய்ய சன்யாச தர்மத்தை விளக்கும் அந்தக் குருகுலத்தில் வியாசர் தனது சீடர்களுக்குத் துறவறம் பற்றிப் போதித்து கொண்டிருந்தார்.
அவர் பல முறை விளக்கம் கொடுத்தும் மாணவர்களுக்குத் துறவறம் பற்றிச் சிறிதும் விளங்கவில்லை.
அப்போது அவருக்கு ஆசிரமத்திற்கு அருகில், சிறிது தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து சென்றது தெரிந்தது.
அந்த ஆடவனின் வலது கையில் மதுக் கிண்ணம், மறுபுறம் ஒரு பெண்ணின் தோளில் கைகளைப் போட்டிருந்தான். மது, மாது எனத் தள்ளாட்டத்துடன் வரும் அவனை நோக்கிச் சென்றார் வியாசர்.
தனது சீடர்களுடன் அங்கே சென்ற அவர், இருவருக்கும் மாலை அணிவித்து, அவர்களை மூன்றுமுறை வலம் வந்து அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினார்.
அதைக் கண்ட சீடர்கள் குழம்பிப் போனார்கள். அவரது செயல் சீடர்களுக்குப் பெரும் அவமானமாகப் போய்விட்டது.
வேத வியாசர் மாபெரும் மகான் என எண்ணிக் கொண்டிருருந்தோம் . ஆனால், இவர் இப்படி ஒரு கீழ்நிலைச் செயலைச் செய்து விட்டாரே என்று குழம்பிப் போனார்கள்.
சீடர்களின் குழப்பத்தை உணர்ந்த வியாசர், “சீடர்களே, நாம் எல்லாம் சிற்றின்பத்தைத் துறந்துப் பேரின்பத்தை அடைய முயல்கிறோம். ஆனால், பேரின்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது தேவையில்லை என அனைத்தையும் துறந்து சிற்றின்பத்தில் திளைக்கும் இவர்கள் தான் பெரும் துறவிகளாக எனக்குத் தெரிகிறார்கள். பேரின்பத்தையேத் துறந்த இவர்கள் தான் சிறந்த துறவிகள்" என்றார்.
சீடர்களுக்குத் துறவு பற்றிய புரிதல் தொடங்கியது.