ஒரு விவசாயி ஒரு நாள் பாம்பு உண்ண முயற்சித்த சிலந்தி ஒன்றைக் காப்பாற்றினான்.
சில நாட்களுக்குப் பிறகு, அவனது வீடு தேடி ஒரு இளம்பெண் வந்து வேலை கேட்டாள்.
"உனக்கு என்ன வேலை தெரியும்?" என அந்த விவசாயி கேட்கும் போது அவள், “நான், நன்றாக நெசவு நெய்வேன்…” என்றாள்.
அவள் மீது பரிதாபம் கொண்ட அந்த விவசாயி அவளுக்கு வேலை தந்தான்.
அவள் ஒரு தறியை உருவாக்கிக் கொண்டு இரவு, பகலாக நெசவு செய்தாள்.
அந்தப் பெண் நெய்து வந்த துணியின் அழகைக் கண்டு வியந்து போன விவசாயி அவளிடம், “எப்படி இதை இவ்வளவு அழகாக நெய்தாய்?” எனக் கேட்டான்.
“என்னிடம் எதையும் நீங்கள் கேட்கக் கூடாது. என் அனுமதியில்லாமல் என் அறைக்கும் வரக் கூடாது…” என்றாள் அவள்.
அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.
அவள் நெய்து தரும் விசித்திர ஆடைகளை விற்று நிறையப் பணம் சம்பாதித்தான் அந்த விவசாயி.
அவனது வாழ்க்கை வளமாகிப் போனது.
அவன் ஒருநாள், ‘அந்த அறைக்குள் அவள் என்னதான் செய்கிறாள்’ என ஒளிந்திருந்து பார்த்தான். அங்கு அவள் ஒரு சிலந்தியாக மாறி நெசவு செய்து கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவன், தன்னால் காப்பாற்றப்பட்ட சிலந்தி தனது நன்றிக் கடனைத் தீர்க்க ஒரு பெண்ணாக உருமாறி வந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். அதன் பிறகு, தனக்கு அவளைப் பற்றிய உண்மை தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவே இல்லை.
ஒருநாள் அவளுக்காகப் பஞ்சு வாங்கிக் கொண்டு வருவதற்காக, விவசாயி சந்தைக்குச் சென்றான். பஞ்சுப் பொதி வாங்கிக்கொண்டு வரும்போது அசதியில் ஓரிடத்தில் உறங்கிவிட்டான். அந்தப் பஞ்சுப் பொதியில் பாம்பு ஒன்று புகுந்து கொண்டது. அதை அறியாமல் வீட்டுக்குப் போய் இளம்பெண்ணிடம் பஞ்சுப் பொதியை ஒப்படைத்தான் விவசாயி. அவளும் உற்சாகத்துடன் சிலந்தியாக உருமாறி பஞ்சை தனது வாயில் அடைத்துக் கொண்டு, அதில் இருந்து நூலை உருவாக்க முயற்சித்தாள்.
அப்போது அந்தப் பாம்பு அந்தச் சிலந்தி மேல் பாய்ந்து கொல்ல முயன்றது. பயத்தில் அந்தச் சிலந்திப் பெண் தப்பி ஓடினாள்.
அவளது கஷ்டத்தைக் கண்ட சூரியன், அவளைக் காப்பாற்றி வானுலகுக்குக் கொண்டுச் சென்றது.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவள் தன் வாயில் வைத்திருந்த பஞ்சைக் கொண்டு அழகான மேகங்களை உருவாக்கினாள். அப்படிதான் வானில் மேகங்கள் உருவாகின