ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர்.
நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளுக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவனைக் குத்திக் காட்டிப் பேசினாள்.
அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.
அவன் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான குருவைக் கண்டு தனது சோகக் கதையைச் சொல்லித் தனக்குக் கல்வியைக் கற்றுத் தரும்படி வேண்டினான்.
அவரும் அவனைச் சீடனாக ஏற்றார்.
மூன்று ஆண்டுகள் வரை கடந்து விட்டன. அவனும் குருவிற்கு நல்ல சீடனாக இருந்து அனைத்தையும் ஆர்வத்தோடு கற்றான்.
குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, “நாளை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் சிறிது வேப்ப எண்ணைய்யைக் கலந்து பரிமாறு. அவன் அதைக் கண்டுபிடித்து விட்டால் உடனே என்னிடம் சொல்லிவிடு” என்றார்.
குருவின் மனைவிக்கு அது ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் கணவன் இட்ட கட்டளையை மீறாத அவள், அவனுக்கு வேப்ப எண்ணெய்யைச் சாப்பாட்டில் சிறிது கலந்து கொடுக்கத் தொடங்கினாள்.
அந்த சீடனும் முகம் மாறாமல் சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்கு அவன் மேல் சிறிது பரிதாபம் ஏற்பட்டது, நாளை முதல் வேப்ப எண்ணைய்யைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று கூட எண்ணிணாள். ஆயினும் தனது கணவரின் சொல்லை மீறும் துணிவு அவளுக்கு வரவில்லை.
இப்படியே வேப்ப எண்ணெய் கலந்த சாப்பாடு மூன்று மாதத்திற்கும் மேலாகப் பரிமாறப்பட்டது.
ஒரு நாள் அந்தச் சீடன் குருவின் மனைவியிடம், “அன்னையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமாக இருக்கும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாகச் சிறிது வேறுபாடு தெரிகிறது. சாப்பாட்டில் வேப்பெண்ணை கலந்த வாசனை அடிக்கிறது. சாப்பாடும் கசக்கிறது” என்றான்.
குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று தெரியவில்லை, அதைக் கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
குருவின் மனைவி குருவிடம், சாப்பாட்டில் வேப்பஎண்ணெய் கலந்தது போலிருக்கிறது என்று அவன் சொன்னதைச் சொன்னாள்.
உடனே குரு சிரித்துக் கொண்டே, சீடனைக் கூப்பிட்டார்.
“சீடனே, நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக அனைத்தையும் உண்மையான ஆர்வத்தோடு கற்றாய். நீ அனைத்தையும் கற்று முடித்த அறிகுறிகள் தெரிகின்றன. நாளை காலையில், நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என்றார்.
சீடனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் காலையில், குருவிடம் விடைபெற்று வீட்டுக்குப் புறப்பட்டான்.
குருவின் மனைவி குருவிடம் வியப்புடன் கேட்டாள், “சுவாமி, சாப்பாட்டில் வேப்பெண்ணெய் கலந்ததற்கும் படிப்புக்கும் என்ன தொடர்பு? எனக்கு எதுவும் விளங்கவில்லை” என்றாள்.
குரு சொன்னார், “நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பி வைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.