ஒரு பெரியவருக்கும் ஒரு வியாபாரிக்கும் தகராறு ஏற்பட்டது.
ஒரு விஷயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோக வேண்டும் என்று வியாபாரி விரும்பினார். ஆனால் அது பெரியவருக்குப் பிடிக்கவில்லை.
ஒரு சமயம் இது பற்றிப் பேசுவதற்காக அந்தப் பெரியவர் வியாபாரியின் வீட்டிற்குச் சென்றார்.
அவர் அங்கிருந்த வேலைக்காரனைப் பார்த்து, “ஐயா வீட்டில் இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.
உள்ளேயிருந்தே கேட்டுக் கொண்டிருந்த வியாபாரி அவர் காதில் படும்படியாக, “ஐயா இல்லையென்று அந்த மடையனிடம் சொல்” என்றார்.
அதைக் கேட்ட பெரியவர், “கடவுள், உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதைக் கேட்டு வியாபாரியின் மனதும் மாறிற்று.
அன்று மாலையே பெரியவரைத் தேடிக்கொண்டு வியாபாரி அவர் வீட்டுக்குச் சென்றார்.
“நான் உங்களை எவ்வளவோ கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறேன். ஆனால் உங்களுக்குக் கோபம் வருவதில்லேயே, எப்படி?” என்று கேட்டார்.
அதற்குப் பெரியவர், “கோபமே வராமல் இருக்க நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன், “கோபம் வரும்பொழுது நாம் என்ன பண்ணுகிறோம்? கத்திப் பேசுகிறோம். கோபமாக இருக்கும்போது மெதுவாகப் பேச முடியாது. அதைப் போலவே மெதுவாகப் பேசினால் கோபம் வராது. ஆகவே எப்பொழுதும் மெதுவாகப் பேசுவது என்று நான் வைத்திருக்கிறேன்” என்றார்.