ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்த அவன், தானும் பணக்காரனாக வேண்டும், பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்று நினைத்தான். அதற்காகத் தன் உழைப்புக்குக் கிடைத்த கூலியையெல்லாம் சேமித்துப் பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென்று நினைத்தான்.
ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள ஊருக்கு சென்று கொண்டிருந்தான். அங்கு பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல் கிடந்ததை பார்த்தான்.
அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனவும், மலிவான விற்பனைக்கு உள்ளதாகவும் ஊர் மக்கள் தகவல் கொடுத்தார்கள்.
ஊர் தலைவரை காணச் சென்ற அவன், நிலத்தை வாங்குவதற்கான தன் விருப்பத்தைக் கூறினான்.
ஊர் தலைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
“நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை நீ எடுத்துக் கொள்” எனக் கூறினார் ஊர்த் தலைவர்.
இதைக் கேட்ட இளைஞன் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் பல கற்பனைகளைப் பறக்க விட்டான்.
மறுநாள் காலையில், இளைஞன் தனது லட்சியத்தை அடைய எடுக்கப் போகும் முயற்சியைக் காண ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.
ஊர் தலைவர் ”கிளம்பு” என்று சொல்லியவுடன் அவன் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டே இருந்தான். உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான்.
சூரியன் மறைவதற்குல் ஓடியவன் வந்துவிடுவானா இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்கச் சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனைக் கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
அவனது உடல் வலுவிழந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணறியது. அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப்பட்டவன், திடிரென கீழே விழுந்து உயிர் துறந்தான்.
இவ்வளவு தூரம் ஓடிப் பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்குக் கடைசியில் மிஞ்சியது அவனை புதைப்பதற்கான ஆறு அடி இடம் மட்டுமே.