துறவி ஒருவர், அழகான கிளி ஒன்றை அக்பருக்குப் பரிசாக அளித்தார்.
அதை மிகவும் மகழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அக்பர், நன்றியுள்ள வேலையாள் ஒருவனை அழைத்து, அந்தக் கிளியைக் கொடுத்து, ‘மிகவும் கவனத்தோடு, அதற்குத் தேவையான உணவினைக் கொடுத்து வளர்த்து வர வேண்டும்; கிளிநோய்வாய்ப்பட்டிருக்கிறது என்றோ அல்லது செத்துவிட்டது என்றோ என்னிடம் வந்து சொன்னால் உனக்கு மரணதண்டனை அளிப்பேன்” என்று கட்டளையிட்டார்.
கிளியை ஏற்றுக் கொண்ட வேலையாள், தினமும் அதைக் கவனத்தோடு வளர்த்துப் பாதுகாத்தான். சில மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கிளி நோய்வாய்ப்பட்டு செத்துப் போனது.
கிளி செத்துவிட்ட செய்தியை அரசரிடம் சொன்னால், மரணதண்டனை கிடைக்கும் என்று பயந்த அவன், அதிலிருந்து தப்பிக்க வழி என்ன? என்று யோசித்தான். அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை.
அவன் மந்திரி பீர்பாலிடம் ஓடி, அவர் காலில் விழுந்து வணங்கினான். பின்னர் நடந்ததைக் கூறினான்.
”பயப்படாதே, நான் காப்பாற்றுகிறேன்” என ஆறுதல் கூறி அவனை அனுப்பி வைத்தார் பீர்பால்.
மறுதினம் வழக்கம்போல் அரசசபைக்குச் சென்ற பீர்பால் அரசரை வணங்கி, ”அரசரே, உங்கள் கிளி…” என்று சொல்லத் தொடங்கினார் பீர்பால்.
”என் கிளிக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என் கிளி செத்துவிட்டதா?” என பதட்டத்துடன் கேட்டார் அரசர்.
”மன்னர் பெருமானே! கிளி பெரிய துறவியைப் போலாகிவிட்டது. முகம் வானத்தை நோக்கியுள்ளது. கண்கள் மூடிக்கொண்டிருக்கின்றன” என்றார் பீர்பால்.
உடனே விரைந்து சென்று பார்த்தார் அக்பர்.
கிளி கூண்டுக்குள் செத்துக் கிடந்தது.
”கிளி செத்துவிட்டது” என்று ஏன் முன்பே சொல்லி இருக்கக்கூடாது?”
”அது எப்படி சொல்ல முடியும்? நீங்கள் விரும்பினால் அவ்வாறு சொல்லலாம். ஆனால் அது பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்” என்றார் பீர்பால்.
”இந்நாட்டு மக்கள் உம்மைப் புத்திசாலி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிளி உயிரோடு இருக்கிறதா, செத்துவிட்டதா என்பதைக் கூட உம்மால் அறிந்து கொள்ள முடியவில்லையே, கிளி இறந்துவிட்டது என்ற முன்பே நீர் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு சிரமத்தோடு இங்கே வந்திருக்க வேண்டியதில்லையே?” என்றார் அக்பர்.
”அது எப்படிச் சொல்ல முடியும்? அரசர் பெருமானே, கிளி செத்துவிட்டது என்று முன்பே நான் சொல்லி இருந்தால் என் தலையை அப்பொழுதே துண்டித்திருக்க மாட்டீர்களா?” என்றார் பீர்பால்.
அதைக் கேட்ட அக்பர் வேலையாளிடம் தாம் முன்பு கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.
நல்லவேளையாக, நன்றியுள்ள அந்த வேலையாளின் தலை வெட்டப்படுவதிலிருந்து தந்திரமாக அவனைக் காப்பாற்றிய பீர்பாலின் மதியூகத்தைப் புகழ்ந்தார்.