ராமர் வனவாசத்தில் இருந்தபோது... ஒரு நாள் காலை நதியில் குளிக்க வேண்டி, அம்பறாத் துணியைக் (முதுகில் கட்டிக் கொள்ளும் அம்புகள் நிறைந்த சிறு கூடை) கழற்றி மணலில் ஒரு அம்பைச் சொருகி அதன் மீது அம்பறாத் துணி முதலியவைகளைச் சாய்த்து வைத்துவிட்டுச் சென்றார்.
குளித்து முடித்துவிட்டு வந்து மணலில் சொருகி இருந்த அம்பைப் பிடுங்கினார்.
அப்போது அம்பின் நுனியில், உயிர் ஊசலாட்டத்தில் ஒரு தேரை இருந்தது.
அதைக் கண்டு மனம் வருந்தினார் ராமர்.
பின்னர் அவர், "தேரையே! நீ மணலுக்குள் இருப்பதை அறியாமல், தீயவர்களை மட்டுமே அழிக்கும், என் அம்பு அப்பாவியான உன்னைப் பலி வாங்கிவிட்டதே, இதற்குக் காரணமான என்னை மன்னித்து விடு" என்றார்.
அதைக் கேட்ட தேரை, "பரவயில்லை ராமா! உன் கையால் சாவதே எனக்குக் கிடைத்த பெருமையாக நினைக்கிறேன்" என்றது.
தேரை சொன்னதை நினைத்து மேலும் வருந்திய ராமர், “என் அம்பு உன்னைத் துளைக்கும் போது... ஒரு முறை... என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டார்.
அதற்குத் தேரை, "வேறு எவராவது என்னைக் கொல்ல வந்திருந்தால்..., நான் 'ராமா' என்று உன்னை அழைத்திருப்பேன்! ஆனால்... அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?" என்றது.
தேரை சொன்னதைக் கேட்டு ராமன் மேலும் வருத்தமடைந்தார்.