ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார். அந்தக் குதிரைக்குத் தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுள்கிட்ட வேண்டியது.
கடவுள் குதிரையின் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?” என்றார்.
குதிரை, “நான் இன்னும் அழகாகனும், அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும்” என்று கேட்டது.
கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,கால்களையும் நீளமாகப் படைத்தார்.
குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது. தன் உருவத்தைப் பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.
“அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள்” என்றது குதிரை.
“நீ விரும்பிய மாதிரி தானே உன்னைப் படைத்துள்ளேன், பிறகு ஏன் வருத்தபடுகிறாய்?” என்று கடவுள் கேட்டார்.
“இல்லை, என் உருவம் மிகவும் மோசமாகப் போய்விட்டது” என்றது குதிரை.
உடனே கடவுள், “நான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்துள்ளேன். உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும், ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும். அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும்” என்றார்.
“நான் உங்கள் படைப்பின் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். என்னை முன்பு போலவே மாற்றி விடுங்கள்” என்று குதிரை வேண்டியது.
”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில் என்பதை நீ உணர்ந்து கொண்டதே போதும்” என்று சொல்லியபடி கடவுள் குதிரையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றினார்.