தாயின் எண்ணம்
பாண்டுவின் மனைவியாகிய குந்தி ஆண் குழந்தை பெற்ற விபரம் கேள்விப்பட்டு அஸ்தினாபுரத்தின் அரசனான திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி குந்தியின் மேல் பொறாமை கொண்டு, தான் பல வருடங்களாக சுமந்திருந்த கர்ப்பத்தைச் சிதைத்துக் கொண்டாள்.
அப்படி அவள் செய்யாதிருந்திருந்தால், அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஏகசக்ராதிபதியாய் மூன்று உலகங்களிலும் ஆளுமை செலுத்தி அரசாட்சி செய்யும் பேரரசனாக இருந்திருப்பான். அப்படி இல்லாமல் சிதைந்த கர்ப்பம் வேதவியாசர் அருளால் ஒருவாறு கூடப்பெற்றது. அதனால் பொறாமையின் இருப்பிடமாகத் துரியோதனன் பிறந்தான்.
துரியோதனன் செல்வத்திலும் சௌகர்யத்திலும் மிகுந்து விளங்கும் பாண்டவர் மேல் பொறாமை கொண்டு, அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி, நாடு, நகரம் முதலியவற்றைக் கவர்ந்து கொண்டதுமன்றி திரௌபதியை நடுச்சபையில் இழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கமும் செய்தான். அதனால் துரியோதனன் மகாபாரத யுத்தத்தில் புத்திர மித்திர பந்து வர்க்கங்களோடு மரணமடைந்தது மட்டுமல்லாது நரக வேதனைகளையும் அனுபவித்தான் என்று பழம்பெரும் நூல்கள் கூறுகின்றன.
தாயின் பொறாமை எண்ணம் சிசுவாயிருந்தவன் குணமாக மாறிப் போய்விட்டது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.