ஒரு ராஜாவுக்கு இரண்டு பஞ்சவர்ணக் கிளிக் குஞ்சுகள் வெகுமதியாக வந்தன.
ராஜா அந்த இரண்டையும் பறக்க வைத்துப் பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு.
அதுல ஒரு கிளி நல்லா பறந்து, வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பித்தது. ஆனால், இன்னொரு கிளி பறக்கக் கூடத் தெரியாமல் ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது.
ராஜா, மூத்த அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டுப் பயிற்சி கொடுக்க வச்சும் அந்தக் கிளி பறக்கவில்லை.
இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து " அந்தக் கிளியை நான் பறக்க வைக்கிறேன்"னு சொன்னார்.
அடுத்த நாள் காலையில் ராஜா கண் விழிக்கும் போது, பறக்காத அந்தப் பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்குமிங்கும் பறந்து சுத்திக்கிட்டிருப்பதைப் பார்த்தார்.
அவருக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை எப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார்.
அதுக்கு அந்த விவசாயி பணிவுடன், "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே! மரத்தில் ஏறி அந்தப் பறவை உட்கார்ந்திருந்தக் கிளையை நான் வெட்டி விட்டேன். கீழே விழப்போகிறோம் என்று தெரிந்ததும், அந்தக்கிளி தட்டுத்தடுமாறிப் பறக்கப் பழகிவிட்டது” என்றார்.
இப்படித்தான் நாமும் பல சமயங்களில் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்து கொண்டு, அதை மட்டுமே நம்மால் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டு பேசாமலிருந்து விடுகிறோம்.
ஆனால் நாம் சாதிக்கக் கூடியவை எண்ணற்றவை... சாதிக்க முடிந்தவை முடிவற்றவை...!