“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” என்று பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்துக் கேட்டார்.
பீர்பால், "இதற்கு உடனே விடை கூற முடியாது, எனக்குச் சிறிது காலம் அவகாசம் வேண்டும்" என்று கேட்டார்.
அகபரும் ஒரு வார காலத்தில் அதற்கு விடையளிக்க வேண்டும் என்று சொல்லிக் கால அவகாசம் வழங்கினார்.
சில நாட்கள் கழித்து, அக்பர் தனது குடும்பத்தினருடன் கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது.
அக்பர் படை வீரர்கள் பாதுகாப்புடன் தனது குடும்பத்தினருடன் பீர்பாலையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
அவர்கள் படகில் சென்று கொண்டிருந்த போது பீர்பால், அக்பரின் பேரனைத் தூக்கிக் கங்கை நதியின் ஆழமான பகுதியில் போட்டு விட்டார்.
அதைக் கண்ட அக்பருக்குக் கோபம் வந்த போதும், தனது கோபத்தை வெளிக்காட்டாமல், உடனே ஆற்றில் குதித்துத் தனது பேரனைக் காப்பாற்றினார்.
பின்னர் பீர்பாலைப் பார்த்து, “முட்டாளே! என் பேரனை எதற்காக ஆற்றில் தூக்கிப் போட்டாய், உன்னை என்ன செய்கிறேன் பார்... ” எனக் கோபமாகச் சத்தம் போட்டார்.
உடனே பீர்பால், “பேரரசே! குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, இங்கிருக்கும் படைவீரர்களையோ, என்னையோ அல்லது வேறு யாரையும் சொல்லாமல் நீங்கள் ஏன் ஆற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றினீர்கள்?” என்று கேட்டார்.
அக்பர், "குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?" எனப் பதிலுக்குக் கேட்டார்.
பீர்பால் அமைதியாக, "பேரரசே, சில நாடகளுக்கு முன்பாக நீங்கள் என்னிடம், கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? அவருக்கு வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்களே... இங்கு எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்திலிருப்பவர்களை இறைவன் தானே வந்து காக்கிறான்" என்றார்.