புத்தபிரானுக்கு மேளம் அடிப்பதில் விருப்பம் அதிகம். அவர் தன் கையில் எப்போதும் ஒரு மேளத்தை வைத்துக் கொண்டிருப்பார்.
தன்னைத் தேடி வருபவர், பெரிய அளவில் காணிக்கை கொடுத்தால், அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்துத் தானம் அளித்தவரின் பெருமையை அங்கே கூடியிருப்பவர்களின் முன்பாகச் சொல்லி மகிழ்வார்.
அந்த நாட்டு மன்னனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது.
இந்த நாட்டில், தானம் அளிப்பதில் தன்னை விட உயர்ந்தவர் யாரும் இருக்கக் கூடாது. தனக்கு மட்டுமே அந்தப் பெருமை சேரவேண்டும் என்ற எண்ணத்தில் யானைகளில் முத்து, பவளம், வைரக்கற்கள், தங்கக்கட்டிகள், பழம், உணவு வகைகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.
வழியில் ஒரு மூதாட்டி வந்தாள்.
“மன்னரே, புத்தரைத் தரிசிப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். எனக்குப் பசி கடுமையாக இருக்கிறது” என்றாள் அவள்.
உடனே அந்த மன்னன் அவளை நோக்கி, ஒரு மாதுளம்பழத்தை வீசினான்.
சிறிது நேரத்தில், அவன் புத்தரின் இருப்பிடத்தை அடைந்து தான் கொண்டு வந்த அனைத்தையும் தானமாகப் புத்தரிடம் செலுத்தினான்.
அந்த மன்னன், தன் தானத்தின் அளவிற்குப் புத்தர் ஒரு அரைமணி நேரமாவது மேளம் அடிப்பார் என நினைத்தான்.
புத்தர் எழுந்திருக்கவே இல்லை.
அரசர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில், அவனிடம் மாதுளம்பழம் பெற்ற மூதாட்டி அங்கு வந்தாள்.
புத்தரின் காலடியில் மன்னனிடம் பிச்சையாகப் பெற்ற மாதுளம் பழத்தைச் சமர்ப்பித்தாள்.
புத்தர் எழுந்தார். தான் வைத்திருந்த மேளத்தை வேகமாக அடித்தார்.
மன்னனுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டது.
அவன் புத்தரைப் பார்த்து, “புத்தரே, இதென்ன அநியாயம்! இந்தக்கிழவி ஒரு பழத்தைத் தந்ததற்காக மேளம் அடித்தீர்கள். நான் எவ்வளவு காணிக்கை கொடுத்தும் எழாமல் இருந்தீர்களே... இது உங்களுக்குச் சரியாகப்படுகிறதா?” என்று கேட்டான்.
உடனே புத்தர், “மன்னா, நீ காணிக்கை அளித்ததன் நோக்கம் உன் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்கானது. ஆனால் இவளோ, உன்னிடம் பிச்சையாகப் பெற்ற பழத்தை, தனது கடும் பசியிலும் கூட சாப்பிடாமல், தன்னுயிர் போனாலும் போகட்டும் என்று நினைத்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள். தானத்திலேயே உயர்ந்த தானம், தன்னுயிர் பிரியும் நிலை இருந்தாலும், அதையும் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உதவுவதே!” என்றார்.
மன்னனின் குனிந்த தலை நிமிரவில்லை.