துறவி ஒருவர் தன் மாணவர்களை அழைத்து, ”இரவு முடிந்து விடியல் தொடங்கும் நேரம் எப்போது எனக் கூற முடியுமா?“ எனக் கேட்டார்.
அதற்கு ஒரு மாணவன், ”எதிரில் வருவது நாயா? ஆட்டுக்குட்டியா? என அறிந்து கொள்ளும் அளவிற்கு வெளிச்சம் வரும் நேரம்” என்றான்.
“இல்லை” என்றார் துறவி.
மற்றொரு மாணவன், ”எதிரில் உள்ளது வேம்பு மரமா? முருங்கை மரமா? என்று அறியும் அளவிற்குத் தேவையான வெளிச்சம் வரும் நேரம்” என்றான்.
“அதுவும் இல்லை ” என்றார் துறவி.
“ஐயா, சரியான விடையைத் தாங்களே கூறுங்கள் ” என்றான் ஒரு மாணவன்.
அதற்குத் துறவி, ”புதியவர் ஒருவர் நம்மிடையே வரும் பொழுது, அவரும் நம் சகோதரர் என்று நாம் எப்பொழுது நினைக்கிறோமோ, அந்நேரமே விடியல் தொடங்கும் நேரமாகும்” என்று கூறினார்.