சிலர் ஞானி ஒருவரிடம் சென்று, “ நாங்கள் காசி, ஹரித்துவார் எல்லாம் சென்று புனித கங்கையில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்லி அவரை அழைத்தனர்.
அந்த ஞானி, “நான் இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை” என்று சொல்லி, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களிடம் கேட்டார்.
அவர்கள், ''என்ன செய்ய வேண்டும், உடனே சொல்லுங்கள்” என்றனர்.
“அது பெரிய வேலை இல்லை, நீங்கள் கங்கையில் முழ்கும் போதெல்லாம், இந்தப் பாகற்காயையும் குளிப்பாட்டி என்னிடம் திரும்பக் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அவர்களும் அதற்குச் சம்மதித்து அந்தப் பாகற்காயை வாங்கிக் கொண்டு சென்றனர்.
புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த அவர்கள் ஞானியிடம், அந்தப் பாகற்காயை அவர் சொன்னபடியே, கங்கை நீரில் குளிப்பாட்டிக் கொண்டு வந்ததாகச் சொல்லித் திரும்பக் கொடுத்தனர்.
அவர் அந்தப் பாகற்காயை வாங்கி, அதைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எல்லோருக்கும் ஒரு துண்டைக் கொடுத்தார்.
''கங்கையில் முழுகி வந்த பாகற்காய்... இப்போது சாப்பிட்டுப் பாருங்கள் தித்திக்கும்" என்றார்.
ஆர்வமுடன் வாங்கிய அவர்கள் அதை வாயில் போட்டு மென்ற வேகத்தில் அதனை துப்பினார்கள்.
பின்னர் அவர்கள், “சுவாமி, தித்திக்கும் என்றீர்கள். ஆனால், இது கசக்கிறதே” என்றனர்.
“பார்த்தீர்களா? இந்தப் பாகற்காய் எத்தனை தான் கங்கையில் முழுகிக் குளித்தாலும் அதன் தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலத்தான், நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்தப் புண்ணிய நதிகளில் நீராடினாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை” என்றார்.
அவர்கள் தலை குனிந்து நின்றனர்.