ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்குச் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் புதிதாக எழுதி இருந்ததைப் பார்த்த அவர்கள் அனைவரும் அதைப் படித்துப் பார்த்தனர்.
அதில் ”உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார், அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
அதைப் படித்தவுடன் அவர்கள் அனைவருக்கும், நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று முதலில் வருத்தமாக இருந்தது, ஆனால், சிறிது நேரத்தில், நம் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர் யாராக இருக்கும்? என்று ஆர்வமும் வந்தது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.
சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராகச் செல்ல ஆரம்பித்தனர். அந்தச் சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்? நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கிச் சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ, அங்கு அவர்கள் முகமே தெரிந்தது.
கண்ணாடி அருகில் சிறிதாக ஒரு வாசகம் எழுதி இருந்தது. அந்த வாசகம்;
”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் என்றால், அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை, உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால், ஏன், உங்கள் நண்பர்களால் கூட மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்..