தான் செய்த பல முயற்சிகளில் தோல்வி அடைந்த மன்னார்சாமி தன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
இரவு நேரமாகி விட்டதால், அருகில் தெரிந்த ஒரு பழைய மண்டபத்தில் அன்றிரவை கழிக்க முடிவு செய்து அங்கு சென்றான்.
அங்கே துறவி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
தூக்கம் வரும் வரை அவரிடம் பேசிக் கொண்டிருப்போமே என்று நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தான் மன்னார்சாமி.
அவன் பேசுவதிலிருந்து அவன் விரக்தியை புரிந்து கொண்ட அந்தத் துறவி, "இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு வெறுப்புடன் பேசுகிறாயே, ஏன்?" என்று கேட்டார்.
"என்ன சாமி செய்வது? எதைத் தொட்டாலும் தோல்வியில் முடிகிறது. ஊராரின் இழிவுப் பேச்சுக்கு ஆளாக நேரிடுகிறது. என்ன வாழ்க்கையோ! தங்களைப் பார்த்தால் ஞானி போல் தெரிகிறது, எனக்கு நீங்களே நல்லதானக ஒரு வழியைச் சொலுங்களேன்?" என்று கேட்டான் மன்னார்சாமி.
"உனக்குக் கழுதையாக இருக்க விருப்பமா? அல்லது எருமையாக இருக்க விருப்பமா? அல்லது குதிரையாக இருக்க விருப்பமா?" என்று கேட்டார் அந்தத் துறவி.
"தாங்கள் கேட்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை சுவாமி" என்றான் அவன்.
"ஒரு கழுதையை அடித்தால் அது என்ன செய்யும்?"
"அதன் பின்னங்காலால் எட்டி உதைக்கும்"
"ஒரு எருமையை அடித்தால்?"
"பேசாமல் எதுவும் செய்யாமல் நிற்கும்"
"ஒரு குதிரையை அடித்தால்?"
"சீறிக் கொண்டு முன்னாள் பாய்ந்து செல்லும்"
"உனக்கு வரும் அவமானங்களும் ஏளனப்பேச்சும் அந்த அடிபோல தான். நீ கழுதையாகவோ, எருமையாகவோ, குதிரையாகவோ இருப்பது உன் விருப்பம்" என்றார் அவர்.
புது நம்பிக்கையுடன் அவன் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான் .