ஒரு குரு, பானை செய்பவனைச் சந்திக்க குரு சென்றார்.
பானைகளை செய்து கொண்டிருந்த அந்தக் குயவன், பக்கத்தில் ஒரு ஆட்டைக் கட்டிப் போட்டிருந்தான்.
குரு அவனிடம், “எதற்கு அந்த ஆட்டைக் கட்டிப் போட்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தக் குயவன், “ இந்த ஆட்டைக் கடவுளுக்குப் பலி கொடுக்க போகிறேன்” என்றான்.
உடனே குரு, அங்கிருந்த அவன் செய்த பானைகளில் இரண்டை அவன் முன் தூக்கிப் போட்டு உடைத்தார்.
அதைப் பார்த்த குயவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“என்ன சுவாமி, இப்படி பைத்தியக்காரனைப் போல் திடீரென்று என் பானைகளை எடுத்து என் முன்னாலேயே போட்டு உடைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அந்தக் குரு, “உனக்குப் பிடிக்குமே என்றுதான், அதை எடுத்துப் போட்டு உடைத்தேன்” என்று சொன்னார்.
“நான் உருவாக்கியதை என் முன்னாலேயே உடைத்தால், அது எனக்கு எப்படிப் பிடிக்கும்?” என்று கேட்டான்.
உடனே அந்தக் குரு, “இறைவன் கஷ்டப்பட்டுத் தான் படைத்த உயிரை, அவன் முன்னாலேயே பலி கொடுத்துக் கொல்ல நினைக்கிறாயே... அது எப்படி ஆண்டவனுக்குப் பிடிக்கும்?” என்று கேட்டார்.
அந்தக் குயவனுக்கு உண்மை புரிந்தது, அவன் ஆட்டைக் கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான்.