ஒரு நாட்டின் அரசனுக்குப் பிறந்த நாள் வந்தது. அன்று அந்த நாட்டிலிருந்த அறிஞர்களெல்லாம் வந்து அவரைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடிக் குவித்தனர்.
அவரும் அவர்களைப் பாராட்டி விட்டு, “அறிஞர் பெருமக்களே! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும், இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்காலச் சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்" என்றார்.
அறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் அரசனிடம், "ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை" என்று கருத்துத் தெரிவித்தனர்.
மனம் மிக மகிழ்ந்த அரசர், "அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்' என்றார்.
அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர். பின்னர் அவர்கள் அரசனை அணுகி, "அரசர் பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்"என்று கூறித் தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.
அரசனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, "உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.
அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி அரசனிடம் சமர்ப்பித்தனர்.
மகிழ்ந்து போன அரசன் மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார்.
"ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்... இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.
அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து அரசனிடம் சமர்ப்பித்தனர்.
அதைப் படித்துப் பார்த்த அரசன்," ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே...?" என்றார்.
அறிஞர்கள் குழு சில நாட்கள் விவாதித்தது. கடைசியில் அறிஞர்கள் தங்கள் முடிவை அரசனிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர்.
அதைப் படித்துப் பார்த்த அரசன் துள்ளிக் குதித்தார்.
"இவ்வளவு எளிமையாக ஒரு வாசகத்தை உருவாக்கி விட்டீர்கள்... இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்" என்றபடி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் நாடு முழுவதும் பறை கொண்டு அறிவித்தான்.
அந்த வாசகம் எது தெரியுமா?
"இலவசமாக உணவு கிடைக்காது"