காசிப முனிவருக்கு கர்த்துரு, விந்தை என்று இரு மனைவிகள் இருந்தனர். அவர்களிருவருக்கும் நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. அவர்களிருவரும், தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இவர்களின் இடைவிடாத வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களிடம் ஆளுக்கொரு முட்டையைக் கொடுத்துக் குறிப்பிட்ட காலம் வரை, அதைப் பாதுகாத்து வந்தால் உலகம் போற்றும்படியான மகன்கள் பிறப்பார்கள் என்றும் அருளினார்.
அவர்களும் அந்த முட்டையைத் தங்களுடைய வழிபாட்டு அறையில் வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
ஒரு வருடத்திற்குப் பின்பு, விந்தையின் முட்டையிலிருந்து ஒரு பறவை பிறந்தது. தனக்கு மகன் பிறப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அவள் கண் கலங்கியபடி இறைவனை நினைத்தாள். அவர் முன் தோன்றிய இறைவன், “விந்தையே, இது பறவையாக இருக்கிறதே என்று அதிர்ச்சியடையாதே... இந்தப் பறவை நான் முன்பே சொன்னது போல விஷ்ணுவுக்கு வாகனமாய்க் கருடன் என்ற பெயரில் புகழ் பெறுவான்” என்று சொன்னார்.
விந்தைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில், அவசரப்பட்ட கர்த்துரு தான் பாதுகாத்து வந்த முட்டையை உடைத்துப் பார்த்தாள். அதிலிருந்து தலை முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த, உடல் ஊனமுற்ற குழந்தை பிறந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவள், “இறைவா, நான் அவசரப்பட்டு விட்டேன்... என் குழந்தையைக் காப்பாற்றி அருளுங்கள்...” என்று வருந்தி வேண்டினாள்.
அவள் முன்பாகத் தோன்றிய இறைவன், “கர்த்துரு, நீ சிறிது காலம் காத்திருந்தால், உனக்கு அழகிய குழந்தை பிறந்திருக்கும். உன் அவசரத்தால், உன் குழந்தையை ஊனமாக்கி விட்டாய்... இதற்காக, வருந்தாதே... உன் குழந்தையாகப் பிறந்த அருணன், உலகம் முழுவதும் ஒளி வழங்கும் சூரியனுக்குத் தேரோட்டியாக இருந்து புகழ் பெறுவான்” என்று சொன்னார்.
அவர் சொன்னபடியே அருணன் சூரியனின் தேரோட்டியாகப் பணியாற்றிச் சிறப்பு பெற்றான்.