கிருதயுகத்தில் இறைவனான விஷ்ணு, மனித குலம் தோன்றினால், மனித குலம் எந்தச் செயல்களையெல்லாம் செய்யும் என்று சிந்தித்தார். அதன் பின்னர், மனிதர்கள் நற்செயலுக்கு நற்பயன்களைப் பெறவும், தீயசெயல்களுக்குத் தீயபலன்களை அடையவும் வழி செய்தார். மனிதர்கள் அனைவரையும், நற்செயல்கள் செய்து, நற்பலன்களைப் பெற வைத்திட வழிகாட்டும் விதமாக இந்தப் பூமியில் பத்து தோற்றங்களை எடுக்க வேண்டுமென்றும் விரும்பினார்.
படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு இறைவனின் எண்ணங்களும், அதைத் தொடர்ந்து பூமியில் எடுக்கவிருக்கும் தோற்றங்கள் குறித்தும், எந்தெந்த காலத்தில் அவை நிகழப் போகின்றன என்பதும் முன்னரே தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு விஷ்ணுவின் பத்து தோற்றங்களை மனதில் கொண்டு, அந்தத் தோற்றங்களை முதன் முதலாகத் தானே வழிபட வேண்டும் என்கிற ஆசையும் உண்டாயிற்று.
அந்த ஆசையில் பிரம்மா, விஷ்ணு வழிபாட்டிற்குத் தேவையான நறுமண மலர்களும், இனிய பழங்களும் பூமியில் மட்டுமே கிடைக்கும் என்பதால், அவற்றைத் தினமும் பறித்து வருவதற்காகத் தனக்கு நம்பிக்கையான ஒரு தேவகுமாரனைத் தேடினார். பின்னர் அவர், அந்தப் பணிக்குச் சங்குகர்ணன் என்பவனைத் தேர்வு செய்தார்.
அவனிடம், விஷ்ணு பூமியில் பத்து தோற்றங்களை எடுக்கப் போகிறார், அத்தோற்றங்களை முன்னிறுத்தித் தான் வழிபாடு செய்ய விரும்புவதாகவும், அதற்குத் தேவையான மலர்களையும், கனிகளையும் தினமும் பூமிக்குச் சென்று கொண்டு வரும்படி சொன்னார். அவனும் விஷ்ணு பூமியில் எடுக்கப் போகும் தோற்றங்களைத் தானும் முன்பே அறிந்து கொள்ள முடியும் என்று நினைத்து மகிழ்ந்தான்.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் விஷ்ணுவின் ஒவ்வொரு தோற்றத்திற்கும் வழிபாடு செய்யப்பட்டது. பிரம்மன் செய்த வழிபாட்டில் உடனிருந்த சங்குகர்ணன் விஷ்ணுவின் ஒவ்வொரு தோற்றத்தையும், அதன் செயல்பாடுகளையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான். ஒருநாள், திரேதா யுகத்தில் விஷ்ணு இராமனாகவும், மகாலெட்சுமி சீதாதேவியாகவும் தோற்றமெடுப்பதையும், அந்தத் தோற்றத்தில் அவர்கள் வாழ்க்கையையும் பார்த்து மனம் மகிழ்ந்து, தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.
அப்போது, பிரம்மன் வழிபாட்டிற்காகச் சிறிது மலர்களை எடுத்துத் தருவதற்காக அவனை அழைத்தார். ஆனால், அது அவனுக்குக் கேட்கவில்லை. பிரம்மன் இரண்டாம் முறையாக மிகச் சத்தமாக அவனை அழைத்ததும் திடுக்கிட்டு விழித்தான்.
இதனால் கோபமடைந்த பிரம்மன், “சங்கு கர்ணா, உன் பணியில் கவனம் செலுத்தாமல், விஷ்ணுவின் பூலோகத் தோற்றங்களைக் கண்டு மகிழ்ந்த நீ, பூலோகத்தில் பிறந்து, கலியுகத்தில் மீண்டும் பிரம்மலோகம் வந்து சேர்” என்று சாபம் கொடுத்தார்.
இதைக் கேட்ட சங்குகர்ணன், “சுவாமி, நான் உங்களைவிட்டுப் பிரிந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூமியில் வாழ வேண்டுமா? என்னை மன்னித்து எனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தைத் திரும்பப் பெறுங்கள்” என்று வேண்டினான்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பிரம்மன், “சங்குகர்ணா, நான் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது. பூலோகத்தில் பிறக்கும் நீ, விஷ்ணுவின் புகழ் பரப்பும் பணியில், பல அரிய செயல்களைச் செய்து, அதன் மூலம் உனது பெயர் பல யுகங்களுக்கும் நிலைத்து நிற்கும்படி புகழ் பெறுவாய்” என வாழ்த்தினார்.
பிரம்மனிடன் சாபம் பெற்ற சங்குகர்ணன் கிருதயுகத்தில் பிரகலாதனாகவும், துவாபரயுகத்தில் பாஹ்லீக மகாராஜனாகவும், கலியுகத்தில் ஸ்ரீ வியாசராசராகவும், ஸ்ரீ ராகவேந்திரராகவும் தோன்றி விஷ்ணுவின் புகழ் பரப்பினான் என்றும் இந்தக் கதை சொல்லப்படுவதுண்டு.