இளைஞன் ஒருவன் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வேலைத் தேடி அலைகிறான். ஏற்கனவே நிறைய வேலையில் சேர்ந்து, ஒன்றும் ஒத்து வராமல் ஒரு வேலை விட்டு இன்னொரு வேலை என்று தாவிக் கொண்டேயிருந்தான்.
ஒரு நண்பனின் உதவியுடன் ஒரு பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்ந்தான்.
அவன் வேலைக்குச் சேர்ந்த மறு நாளில், அந்தநாட்டின் சுதந்திர தினம் வருகிறது.
அந்த இளைஞனுக்கு அந்நாட்டின் முக்கிய அலுவலகத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவைப் பற்றிய செய்தி சேகரிக்கும் பணி அளிக்கப்பட்டது.
அவனுடைய முதல் நாள் வேலையே முக்கியமான இடத்தில் அமைந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தான். இந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
மறு நாள் அந்த சுதந்திரதின விழா நிகழ்ச்சிக்குச் சென்றான்.
நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்று அங்கேயேக் காத்திருந்தான். நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. விழா தொடங்கவில்லை. தேசியக்கொடி இன்னும் ஏற்றப்படவில்லை.
சிறிது நேரம் கழித்து, ஒரே சலசலப்பு. என்னவென்று புரியவில்லை. ஒவ்வொருவராய் அரங்கை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள். ஒருவரிடமும் சரியான பதில் இல்லை.
வெகுநேரம் காத்திருந்த அவனுக்கு, அன்று விழா நடக்கும் போல் தெரியவில்லை.
அவனுடைய உற்சாகம் அனைத்தும் ஆற்று நீராய் வடிந்தது.
அந்த இளைஞன் தன் நிலையை நினைத்து நொந்து கொண்டே பயங்கர சோகத்துடன் அலுவலகத்திற்குச் சென்றான். நடந்தவைகளெல்லாம் சொன்னான்.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கோபித்துச் சத்தம் போட்டார்.
“எவ்வளவு அருமையான வாய்ப்பு? நல்ல வாய்ப்பைத் தவற விட்டு வந்து நிற்கிறாய். அங்கு வெளியேறிச் சென்ற எவரிடமாவது, நான் 'பத்திரிகையாளர்' என்று சொல்லிக் கேட்டிருந்தால் நம் பத்திரிகைக்கு முழு பக்கமே நிரம்பும் அளவிற்குச் செய்தி கிடைத்திருக்குமே ? நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டு விட்டாயே, உனக்கு இனி இங்கு வேலையில்லை” என்று அவனை வேலையை விட்டு நீக்கினார்.
இப்படித்தான் பலர், ஏதாவதொன்றை மட்டுமே முதன்மையாக நினைத்துக் கொண்டு வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் விட்டு விடுகின்றனர்.