மரத்திற்கு மேலே பறந்து சென்ற கருடன், அந்த மரத்தில் இருந்த சிட்டுக்குருவிகள் மகிழ்ச்சியாக அங்கு இங்கும் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து ரசித்தது.
அப்போது அங்கு எமதர்மன் வருவது கருடனுக்குத் தெரிந்தது.
எமதர்மன் யார் உயிரை வாங்கப் போகிறாரோ என்றெண்ணியபடி, அவர் கண்ணில்படாமல் மறைவாக நின்று கொண்டது.
எமதர்மன் சிட்டுக் குருவிகள் இருந்த மரத்திற்கருகில் வந்து, அங்கிருந்த சிட்டுக்குருவிகளில் ஒன்றைப் பார்த்தபடியே நின்றார்.
மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிட்டுக் குருவிகளில், எமன் பார்வையிடும் சிட்டுக்குருவிக்கு ஆபத்து வந்துவிட்டதே என்று நினைத்த கருடன், அந்தச் சிட்டுக்குருவியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் மேலிருந்து கீழிறங்கியது
வந்த வேகத்தில் அந்த சிட்டுக் குருவியைத் தன் வாயில் கவ்விக்கொண்டு மேலே பறக்கத் தொடங்கியது.
அதைக் கண்ட மற்ற சிட்டுக் குருவிகளெல்லாம் கத்தத் தொடங்கின.
சிட்டுக் குருவியுடன் மேலே பறந்த கருடன், அந்தச் சிட்டுக்குருவியை நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஒரு மரப்பொந்தில் கொண்டு பத்திரமாக வைத்தது.
ஒரு சிட்டுக்குருவியின் உயிரை எமனிடமிருந்துக் காப்பாற்றியதை நினைத்தபடி மகிழ்ச்சியோடு அந்தக் கருடன் உயரே பறக்கத் தொடங்கியது.
கருடனின் மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
கீழே, அந்தச் சிட்டுக்குருவியின் கீச்... கீச்... சத்தம் கேட்டது. கீழே பார்த்த கருடனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சிட்டுக்குருவியின் பாதுகாப்புக் கருதி வைத்தப் பொந்திலிருந்த பாம்பு ஒன்று அந்தச் சிட்டுக்குருவியைக் கொன்று முழுங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த கருடன் வருத்தமடைந்தது. இனி பாம்புடன் சண்டைப் போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. குருவி செத்தது செத்தது தான் என்று நினைத்துக் கொண்டு பறக்கத் தொடங்கியது.
அப்போது தன்னை யாரோ பார்ப்பது போல் தெரிந்ததைக் கண்டு திரும்பியது, அங்கு எமன் நின்றிருந்தார்.
கருடன் கோபத்துடன் எமனைப் பார்த்து, "என்னையும் சிட்டுக் குருவி என்று நினைத்து விட்டீர்களா? நான் விஷ்ணுவின் வாகனம் என்பதை மறக்க வேண்டம். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது... " என்று கத்தியது.
அதைக் கேட்ட எமன், "கருடனே, நான் உன்னை எந்த நோக்கத்துடனும் பார்க்கவில்லை. அந்தச் சிட்டுக்குருவி பாம்பின் வாயில் அகப்பட்டு உயிர் துறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிட்டுக்குருவிக்கும், பாம்பிற்கும் இருக்கும் இடைவெளி நூறு கிலோ மீட்டருக்கும் மேலிருந்தது. நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் இது எப்படி நிகழப் போகிறது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நீ எங்கிருந்தோ பறந்து வந்து, குறித்த நேரத்தில் அந்த நிகழ்வு நடக்க உதவினாய். அதை நினைத்து வியந்து கொண்டிருந்தேன். வேறொன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
'விதியை வெல்ல யாராலும் முடியாது’ என்கிற பேருண்மை கருடனுக்கும் விளங்கியது.