ஒரு ஊரில் கல்லுடைப்பவன் ஒருவன் இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. அவனுக்கு வருமானம் போதவில்லை. அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.
ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தெரிந்தது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை ஆச்சரியப்பட வைத்தன.
அந்தப் பணக்காரனுக்குத்தான் எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். அவனுக்குப் பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என்று நினைத்துப் பார்த்தான்.
அவன் அப்படி நினைத்த அடுத்த நிமிடமே, அவன் பணக்காரனாகிவிட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்குச் செல்வங்கள் குவிந்து விட்டன.
மற்றொரு நாள்… ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனைத் தாண்டிச் சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள்… படை வீரர்கள்… வந்தனர். அவரைக் கண்ட மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவுக்கு அனைவரும் பயந்து நடந்தனர். எத்தனையோ பணக்காரர்கள் அவரைப் பார்த்து வணங்கினார்கள்.
அதைக் கண்ட அவனுக்கு, ‘நாமும் ஒரு அதிகாரியாக இருந்தால் எப்படி இருக்கும்? அதிகாரம்... நம் கையிலிருக்குமே...’ என்று நினைத்தான்.
அவன் எண்ணம் உடனடியாக நிறைவேறியது. அவன் பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகி விட்டான். அவனைப் பார்த்தாலே எல்லாம் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.
ஒரு கோடை நாள்… தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது அதிகாரியாக இருக்கும் கல்லுடைப்பவனுக்கு வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான்… வானத்தில் சூரியன் தெரிந்தது.
“ஓ… உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது… இருக்கட்டும். நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்…” என்றான்.
அவன் உடனே சூரியனாகி விட்டான்!
தனது கிரணங்களை பல மடங்கு வெப்பமாக்கிப் பூமியில் செலுத்தி அத்தனை பேரையும் துன்புறுத்தினான். விவசாயிகளும் தொழிலாளர்களும் சாபமிட்டனர் அவனுக்கு. அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.
“ஓ… மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா… அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு,” என நினைத்தான். நினைத்தபடி அவனும் மேகமாகி விட்டான்.
இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போலக் கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.
“காற்றுக்கு எவ்வளவு சக்தி... நானும் காற்றாக மாறி உலகை ஆட்டிப் படைக்கப் போறேன்” என்று நினைத்தான் அவன்.
அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.
“ஓஹோ… காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா… நானும் பாறையாவேன்,” என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான்.
அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது… ஒரு உளியை வைத்துத் தன் மீதே யாரோ அடிக்கும் சத்தம்… கேட்டுப் பதறியபடி, “அட… உலகின் சர்வ பலம் மிக்க இந்தப் பாறையை விடப் பலமானவன் யாரடா அது…?” என்று கீழே குனிந்து பார்த்தான்.
அங்கு பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல்லுடைப்பவன்!