பல ஆண்டுகளாக புராண, இதிகாசக் கதைகளைச் சொல்லும் பிரசங்கியார் ஒருவர் இறந்த பிறகு மேல் உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரசங்கியார் தன்னைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று நம்பியிருந்தார்.
ஆனால் பாவ, புண்ணியங்களைக் கணக்குப் பார்த்துப் பிறகுதான் சொர்க்கமா? நரகமா? என்று நிச்சயிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
பிரசங்கியார் கோபம் கொண்டு சித்திரகுப்தனை நோக்கிக் கேட்டார்.
"நான் புராணக்கதை சொல்லி எவ்வளவோ தீயவர்கள் திருந்தியிருக்கிறார்கள். திருடர்கள், குடிகாரர்கள், பொய் பேசுபவர்கள் ஆகிய எல்லோரும் நான் சொல்லிய புராணக்கதைகளைக் கேட்டு தீய செயல்களைக் கைவிட்டு நல்லவர்களாக மாறியிருக்கிறார்கள். எவ்வளவோ பேர்களை நல்லவர்களாக மாற்றிய எனக்கு சொர்க்கமில்லையா?"
சித்திரகுப்தன், "நீங்கள் கூறிய புராணங்களுக்கும், கதைகளுக்கும் அந்த இடத்திலேயே கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டு விட்டீர்கள். மாறாக, உங்கள் புராணம் கேட்ட பலர் எந்தக் கூலியும் பெறாமல் தீய செயல்களைக் கைவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடமளிக்கப்படும்" என்றார்.
பிரசங்கியார் மவுனமானார்.