மகாபாரதப் போரிலே அர்ச்சுனனின் அம்புகளால் கர்ணனைக் கொல்ல முடியவில்லை. அவன் செய்த தானங்களின் புண்ணிய பலன் அவனைக் காத்தது.
எனவே அவனை அம்புகளால் கொல்ல முடியாது என்று எண்ணிய கண்ணன், மரணத்தையும் யாசிப்பது என்று முடிவு செய்து, ஏழை அந்தணன் வடிவில் வந்து, “நீ செய்த புண்ணியங்கள் யாவையும் எனக்கு தா” என்று யாசகம் கேட்டான்.
வந்திருப்பது கண்ணன் என்பதை உணர்ந்த கர்ணன், “நம்மிடம் இறைவனே யாசகம் கேட்கிறபோது மறுப்பது எப்படி?” என்று மகிழ்வுடன் “நீ செய்த புண்ணியப் பலனை மட்டும் தான் கேட்டாய், நான் செய்த, செய்கிற,செய்ய போகிற யாவையும் உமக்கு அளிக்கிறேன்” என்று தாரை வார்த்தான்.
இதயத்தில் வழிந்த இரத்தத்தை உள்ளங்கையில் வாரிய கர்ணன் தாரை வார்த்தான்.
தானம் வாங்கும் பொழுது கடவுள் கண்ணன் கை தாழ்ந்தது, கொடுக்கும் பொழுது மனிதன் கர்ணன் கை உயர்ந்தது. கொடுக்கிற எண்ணம் மனிதனை உயர்த்தியது. வாங்குகிற எண்ணம் கடவுளைத் தாழ்த்தியது.
அதற்காகக் கடவுள் தாழ்ந்தவர் இல்லை. மனிதனை உயர்த்துவதற்காகக் கடவுள் தன்னைத் தாழ்த்தவும் தயங்க மாட்டார் என்பதே இங்கு உண்மை.