ஒரு முறை ஜப்பானிய ராஜா ஒருவர் எதிரிகளைத் தாக்க ஓர் இராணுவப் படை ஒன்றை தயார் செய்து போருக்குத் தயாரானார்.
அவர் “எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்தப் படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர்.
அதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்குத் தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து ஆலோசனை கேட்டார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையைச் சொன்னார். அதேபோல் ராஜாவும் செய்தார்.
அது வேறொன்றுமில்லை, அந்த ராஜா போருக்குச் செல்லும் வழியில், அவர்கள் வழிபடும் கோயிலில் நிறுத்திப் பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் “நான் இப்போது இந்த நாணயத்தைச் சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம், இல்லையேல் போரில் தோற்போம்” என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் “நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்” என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.
அனைவரும் அதைக் கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது.
அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளைத் தாக்கி வெற்றிப் பெற்றனர்.
யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி “விதியை யாராலும் மாற்ற முடியாது.” என்று ராஜாவிடம் சொல்ல “ஆம்” என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதைக் காண்பித்தார்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்தக் காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.