“ஒரு போர் வீரன், தன்னுடைய உயர் அதிகாரியின் மனைவியைக் காதலித்தான். அது உயர்அதிகாரிக்குத் தெரியவர... மரண தண்டனைக்கு பயந்தவனாய் அந்த அதிகாரியின் உடைமைகளை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் சந்தோஷமாக வாழ்வதற்குத் திருடர்களாக மாறினர். சிறிது காலம் நிலைத்த சந்தோஷம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.
ஒரு நாள், அந்த பெண் போர் வீரனை உதறிவிட்டு ஓடிவிட்டாள்.
அதனால் மனமுடைந்த வீரன், அருகில் இருந்த ஊரில் பிச்சையெடுக்க ஆரம்பித்தான். தனது வாழ்நாளில் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, சில நல்ல காரியங்களைச் செய்ய முடிவெடுத்தான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதும், அதனால் பல பேர் மரணமடைவதும் இவனுக்குத் தெரிய வந்தது.
அதனால் அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதையும் வேலையாகச் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் உருண்டு ஓடியது. சுரங்கப்பாதையும் அகலமானது. இன்னும் சில ஆண்டுகளில் வேலை முடிந்துவிடும் என்றிருந்த நிலையில் அவன், தன்னுடன் வந்த உயர் அதிகாரியின் மனைவியின் மகன் கண்களில் அகப்பட்டான்.
தந்தைக்குத் துரோகம் செய்தவனை பழிதீர்க்கும் கோபம் அவனது கண்களில் கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே போர் வீரன், “உன்னுடைய கோபம் நியாயமானதுதான். நீ என்னைக் கொன்றுவிடு. ஆனால், இந்தச் சுரங்கத்தை முழுமையாக வெட்டி முடித்துவிடுகிறேன். அதுவரை காத்திரு” என்று உருக்கமாகக் கோரிக்கை வைத்தான்.
அதன்படி... எஞ்சியிருக்கும் சுரங்க வேலைகளை வேகமாகச் செய்ய ஆரம்பித்தான். எத்தனைக் காலம் தான் அவனுக்கும் பழிவாங்கும் கோபம் இருக்கும். அதனால் கோபம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. போர் வீரனுடன் சேர்ந்து அவனும் சுரங்க வேலைகளைத் துரிதப்படுத்தினான். கடைசியாகச் சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுகாப்பாக அந்தச் சுரங்கப் பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
போர் வீரன் உயர் அதிகாரியின் மகன் முன்பாகக் கத்தியுடன் சரணடைந்து, தன்னைக் கொன்று விடும்படி கேட்டுக் கொண்டான்.
அப்போது அதிகாரியின் மகன் கண்கள் கண்ணீரால் சிவக்க ஆரம்பித்தது.
“என் அன்னையை ஏமாற்றிய போர் வீரனுக்கும், மற்ற உயிர்களைக் காப்பாற்ற நினைக்கும் உனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இடைப்பட்ட நாட்களில் நிறையவே நீ மாறிவிட்டாய். இப்போது நான் உன்னைக் கொன்றால், அந்தப் பழியும் பாவமும் என் மேல் விழுந்துவிடும். அதை என்னால் சுமக்க முடியாது. ஆகவே, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்து உன்னுடைய பாவங்களை நீயேப் போக்கிக் கொள்” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதே நினைத்தால், அவனுக்கும் நல்லதே நடக்கும்.