முன்னொரு காலத்தில் ஏழை விறகு வெட்டி ஒருவன் இருந்தான். காலையில் காட்டுக்கு விறகு வெட்டப் போவான். மாலையில் வெட்டிய விறகை விற்கப் பக்கத்து நகரத்துக்குப் போவான். விறகை விற்றுக் கிடைக்கும் பணத்தில் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான்.
அவன் மனைவியோ "ருசியா" சமைச்சுச் சாப்பிட வாங்கி வருவதில்லை என்று சண்டை போடுவாள். விறகு விற்ற காசுக்கு இவ்வளவுதான் வாங்க முடிந்தது என்பான். சுள்ளி விறகா வெட்டி வித்தா இதுதான் கிடைக்கும். அடுத்த வீட்டு வீரன் பாருங்க எவ்வளவு சம்பாதிச்சுட்டு வருகிறார். நீங்களும் இருக்கீங்களே என்று திட்டுவாள்.
"வீரன் நாலுபேரை ஏமாத்திச் சம்பாதிக்கிறான். இன்னைக்கு நல்லா இருக்கலாம். ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் வீரன் ஜெயிலுக்குத்தான் போகணும். நமக்கு வயிறாரச் சாப்பாடு கிடைக்குது. அதவச்சு சந்தோசமா இருக்கக் கத்துக்க” என்பான் விறகு வெட்டி.
"பசியாரச் சாப்பிட்டால் போதுமா? நாம நாலு காசு சம்பாதிச்சு வசதியா வாழ வேண்டாமா? காட்டுல பெரியமரமாப் பாத்து வெட்டி வித்தா நமக்கும் நாலு காசு சேரும்" என்பாள்.
"ஏதோ, சுள்ளி விறகு வெட்டி தினமும் வயித்தைக் கழுவுறதே அந்தப் பெரிய மரங்களால் தான்! உன் பேச்சைக்கேட்டுப் பெரிய மரமா வெட்டி வித்தாக் கொஞ்ச நாளைக்கு நாம நல்லா இருக்கலாம். அப்புறமா, பெரிய மரங்களும் இருக்காது; சுள்ளி வெறகுக்கும் வழி இருக்காது. நாம பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்" என்பான் விறகு வெட்டி.
இதைக் கேட்டதும், " நாம உருப்புடாம இருக்கிறதுக்குக் காரணமே இதுதான் என்று அழத் தொடங்கி விடுவாள். விறகுவெட்டி மனைவியைச் சமாதானப்படுத்துவான்.
"சரி சரி.. .இனிமே பெரிய மரமா பாத்து வெட்டுறேன்“ என்று சொல்வான். அப்புறம் வழக்கம் போல் சுள்ளிவிறகு வெட்டிப் போய் விற்று வருவான். மனைவி சண்டை போடுவதும் இவன் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக நடப்பதுதான்.
அன்று விறகுவெட்டி நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்தும் போதுமான விறகு கிடைக்கவில்லை. மிகவும்களைத்துப் போய் வீடு திரும்பலாம் என நினைத்தான்.
அப்போது ஒரு பெரிய மரம் ஒன்றைப் பார்த்தான். சரி. இன்றாவது மனைவி சொன்ன மாதிரி இந்த மரத்தை வெட்டி விற்போம். மீன், அது இதுன்னு வாங்கிட்டுப் போவோம் என்று நினைத்துக் கொண்டான்.
மரத்தை வெட்ட வேண்டாம்; அதன் கிளைகளை வெட்டினால் போதும் என்று மரத்தில் ஏறி ஒரு கிளையை வெட்ட கோடாலியை ஓங்கினான்.
அப்போது "வெட்டாதே! " என்ற சப்தம் கேட்டது.
விறகுவெட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் இல்லை. மீண்டும் வெட்டக் கோடாலியை ஓங்கினான். மீண்டும், "வெட்டாதே ! நில்! என்று சத்தம் வந்தது.
விறகுவெட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது, "நான் தான் மரம் பேசுகிறேன். என்னை நீ வெட்டாமல் விட்டுவிடு, நான் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றது மரம்.
மரம் பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான், விறகுவெட்டி. சரி, இன்று பட்டினி தான் என்று சோர்ந்தும் போனான்.
"கவலைப்படாதே! உனக்கு என்ன வேண்டுமோ கேள். நான் தருகிறேன்..." என்று மீண்டும் மரம் பேசியது.
“எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மனைவிக்குத்தான் வசதியா வாழணும்னு ஆசை! எனக்கு எதுவும் வேண்டாம். என் மனைவி நச்சரிப்பு இல்லாம இருந்தா அதுவே போதும்” என்றான் விறகு வெட்டி.
“உன் நல்ல மனசு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ விரும்பியது போல எல்லாம் நடக்கும். நீ, வீட்டுக்குப் போய்ப்பார்!” என்றது மரம்.
விறகு வெட்டி வீட்டிற்குப் போனான். அவன் வீடு இருந்த இடத்தில் பெரிய பங்களா இருந்தது. வீட்டுக்கு வெளியே தயங்கி நின்றான். அப்போது அவன் மனைவி கழுத்து நிறைய நகைகளுடன், பட்டுச் சேலை உடுத்தி வெளியே வந்தாள்.
மரத்தின் மகிமையை எண்ணி வியந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும், அவனும் பட்டு வேட்டி, மோதிரம் என்று விறகு வெட்டி பணக்காரனாக மாறிப் போனான்.
நடந்ததை மனைவியிடம்சொன்னான். நல்லவேளை, இதையாவது புத்திசாலித்தனமாக் கேட்டீங்களே என்று மனைவி சொல்லிச் சந்தோசப்பட்டாள்.
கொஞ்ச நாள் ஆனது. விறகுவெட்டியின் மனைவிக்கு இந்த வாழ்க்கையும் சலித்துப் போனது.
“இந்த ஊர்ல நம்மைப் போல் பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாப் பணக்காரர்களும் மதிக்கிற மாதிரி இந்த ஊர் ஜமீன்தாரா ஆகணும். அப்பத்தான் நம்மை எல்லாரும் மதிப்பாங்க. நீங்க அந்த மரத்திடம் போய்ச் சொல்லி ஜமீன்தாரா ஆக்கச் சொல்லுங்க” என்றாள்.
விறகுவெட்டி மறுத்தான். ஆனால் மனைவியின் பிடிவாதம் வேறுவழியில்லாமல் மரத்திடம் போனான்.
மரம் முன்பாக விறகுவெட்டி போனதுமே, “என்ன ஜமீன்தாராகணுமா?” என்று கேட்டது.
அது என் மனைவியோட ஆசை, என்றான்.
“சரி. வீட்டிற்கு போ” என்றது மரம்.
விறகுவெட்டி வீட்டிற்குத் திரும்பினான். அந்த நாட்டு ராஜா, இவனை ஜமீன்தாராக்கிய செய்தி காத்திருந்தது.
கொஞ்ச நாள் சென்ற பின் ஜமீன்தார் வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டிப் போக இந்த நாட்டுக்கே ராஜா ஆக்கிட மரத்திடம் இன்றே போய்க் கேளுங்கள் என்றாள் அவன் மனைவி.
அவனும், "வேண்டாம், இந்த வாழ்க்கையில்என்ன குறை கண்டாய்?" என்று சொல்லிப் பார்த்தான். அவளின் பிடிவாதம், மீண்டும் மரத்தின் முன் வந்து நின்றான்.
"ராஜாவாக்கிப் பார்க்க ஆசை வந்துவிட்டதா? உன் மனைவிக்கு" என்று கேட்டது மரம்.
உன் மனைவியின் ஆசைப்படியே “நீ ராஜா ஆவாய்! ஆனால் ஒரு நிபந்தனை. உன் மனைவிக்கு இந்த ராஜா வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டி என்றைக்காவது விறகு வெட்டி வாழ்க்கையே மேல் என்று எப்போது எண்ணினாலும் நீ மறுபடியும் விறகு வெட்டியாகிவிடுவாய்” என்று சொல்லிஅனுப்பியது மரம்.
வீட்டுக்கு வந்தான். அரண்மனையின் பட்டத்து யானை மாலையுடன் வீட்டு முன் நின்றது.
விறகுவெட்டி இப்போது அந்த நாட்டு ராஜா!
ராஜாவாகப் பொறுப்பு ஏற்றதும் ராஜாங்க அலுவல் அதிகமாக இருந்தது.
அதனால் விறகுவெட்டி ராஜா தனது மனைவியிடம்பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. பகலில் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று எந்நேரமும் ஓய்வின்றி இருந்தான்.
இரவில் நகர்வலம், ஒற்றர்களுடன், படைத்தலைவர்களுடன் ஆலோசனை; இப்படியாக ராஜா இரவு எந்த நேரத்தில் வந்து படுப்பார் என்றே தெரியாது.
காலையில் மனைவி எழுந்திருக்கும் முன்பு நீராடி கோட்டைக் கொத்தளங்களைப் பார்வையிடப் போய்விடுவார் ராஜா.
இதனால் கொஞ்ச நாளில் ராஜ வாழ்க்கையும் விறகுவெட்டியின் மனைவிக்கு வெறுத்துப் போகப் பேசாமல், "விறகுவெட்டி குடும்ப வாழ்க்கையே மேல்" என்று வாய்விட்டே சொன்னாள்.
அன்று எதிரி நாட்டு மன்னன் படைஎடுத்து வந்து தேசத்தைக் கைப்பற்றினான்.
விறகுவெட்டி தலை தப்பினால் போதும் என்று மனைவியை அழைத்துக் கொண்டு தான் முன்பு வசித்த ஊருக்கே ஓடி வந்துவிட்டான்.
இப்போது, விறகுவெட்டி காட்டுக்குப் போய் முன்பு போல் விறகு வெட்டி சந்தோசமாக வாழ்க்கை நடத்தினான். அவன் மனைவியும் பேராசையை விட்டுவிட்டுக் கிடைப்பதை வைத்துச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தப் பழகிக் கொண்டாள்.