காட்டுப் பகுதி ஒன்றில் அழகான ஒரு மான் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு புதுமையான நறுமணம் தினமும் மானைச் சுற்றி இருந்தது.
பூக்களுக்கு ஒரு நறுமணம் உண்டு. மழைத் தூறல் வரும் முன் மண் வாசனைக்கு ஒரு நறுமணம் உண்டு. ஆனால் அதையெல்லாம் விட இந்த மான் அனுபவித்த நறுமணம் மிகவும் தெய்வீகமாக இருந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை. ஒவ்வொரு மரத்தையும் முகர்ந்து பார்த்து ஏமாற்றம் அடைந்தது.
காடு முழுவதும் முகர்ந்து, மோப்பம் பிடித்துப் பார்த்த மானுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அடுத்தது வண்ணத்துப்பூச்சிகளை முகர்ந்தது. மறுபடியும் ஏமாற்றம். ஒரு வேளை சதுப்பு நிலத்திலிருந்து வருகிறதோ என்று சந்தேகப் பட்டது. அதுவும் இல்லை. பிறகு மார்பு சிவந்த சிறு பறவை ஒன்றை முகர்ந்து பார்த்தது. குறுகிய மலை இடுக்குகள், செடி புதர்கள் என இங்கும் அங்கும் ஓடிக் கொண்டே இருந்தது. எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம். ஆனால் கடைசியில் சோர்வடைந்து கீழே விழுந்தது.
தரையில் கிடந்த போது எண்ணங்கள் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தன. அந்த சமயம் தான் அந்த நறுமணம் தன் உடலிலிருந்து தான் வருகின்றது என்று கண்டுபிடித்தது. உடனடியாக ஒரு நிம்மதியான உணர்வு ஏற்பட்டது. “கடவுளே, இந்த மணம் என்னிடம் இருப்பதை நான் இவ்வளவு நாட்கள் உணரவே இல்லையே” என்ற எண்ணத்துடன் நிம்மதியாகத் தூங்கியது.
உண்மையான மணம் மானுடையதே. அதே போல கடவுளும் எங்கேயோ வெளியே இருப்பதாக நினைத்து நாம் தேடிக் கொண்டிருக்கோம். ஆனால் அவர் நம்முள்ளே தான் இருக்கின்றார். அவ்வளவு தேடலுக்குப் பிறகு மான் உணர்ந்த இந்த தெய்வீக உண்மை.