ஒரு ஊரில் சாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார்.
சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதைக் கண்டார். அந்தப்பை சாமியுடையது எனத் தெரிந்துகொண்ட குரு அதை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார்.
குருவிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக்கொண்ட சாமி, இதை எடுத்துக் கொடுத்த குரு ஏதாவது நம்மிடம் கேட்பானோ என்று நினைத்துக் குருவிடம், நான் இந்தப் பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்தப் பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை எனக்குத் திருப்பி தரவேண்டுமெனக் கூறினார்.
அதைக் கேட்ட குரு மிகவும் கவலையடைந்தார். குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு முடிவுகட்ட அவர்கள் இருவரும் ஊர்த் தலைவரிடம் சென்றனர்.
விவரத்தைக் கேட்ட ஊர்த் தலைவர், சாமியிடம், “நீ எவ்வளவு தங்க நாணயங்களைத் தொலைத்தாய்?” எனக் கேட்டார். அதற்கு அவர் “40 தங்க நாணயங்கள்” எனப் பொய் சொன்னார். ஊர் தலைவர் குருவைப் பார்த்து, “நீ எவ்வளவு தங்க நாணயங்களைக் கண்டுபிடித்தாய்?” என்று கேட்டார். அதற்குக் குரு, “30 தங்க நாணயங்கள்” என்றார்.
இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் சாமியைப் பார்த்து, “குரு கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள், நீ தொலைத்திருப்பதோ 40 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களைக் கொண்டு வந்தால் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன். வந்து வாங்கி விட்டுப் போ... இபோது இந்தப் பையை குருவிடம் கொடுத்துவிட்டுப் போ” என்றார்.
ஊர்த்தலைவரின் தீர்ப்பை கேட்ட சாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தான் வைத்திருந்த 30 தங்க நாணயங்கள் இருந்த பையை குருவிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த இழப்பை எண்ணி வருத்தப்பட்ட அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவு செய்து கொண்டார்.