ஒரு ஊரில் “கணவர்கள் விற்கப்படும்” என்று புதிதாக கடையைத் திறந்தனர்.
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகள் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
அதில்;
* கடைக்கு ஒரு முறை மட்டுமே வரமுடியும்.
* கடையில் மொத்தம் ஆறு தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் ஆண்களின் தகுதிகள் மேலேச் செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
* ஒரு தளத்திலிருந்து மேல் தளத்திற்குப் போய்விட்டால், மீண்டும் கீழ்த்தளத்திற்கு வர இயலாது. அப்படியே வெளியேறிச் செல்ல மட்டுமே முடியும்.
இதையெல்லாம் படித்துப் பார்த்துவிட்டு ஒரு இளம்பெண் கணவர் வாங்க அந்தக் கடைக்கு வந்தார்.
முதல் தளம் அறிக்கை பலகையில்...
“இந்த தளத்தில் இருக்கும் ஆண்கள் வேலை உள்ளவர்கள்… கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்…” என்று இருந்தது.
இது அடிப்படை தகுதின்னு நினைத்த அந்தப் பெண், அந்தத் தளத்திலிருந்து மேல்தளத்திற்குச் சென்றாள்.
இரண்டாம் தளத்திலிருந்த அறிக்கைப் பலகையில்…
“இந்தத் தளத்தில் இருக்கும் ஆண்கள் வேலை உள்ளவர்கள்… கடவுள் நம்பிக்கை உளளவர்கள்… மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்…” என்றிருந்தது.
இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைத்த அவள் இன்னும் மேலே சென்றாள்.
மூன்றாம் தளம் அறிக்கைப் பலகையில்…
“இந்தத் தளத்தில் இருக்கும் ஆண்கள் வேலை உள்ளவர்கள்… கடவுள் நம்பிக்கை உளளவர்கள்… குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் வசீகரமானவர்கள்…” என்றிருந்தது.
அந்த இளம்பெண் வசீகரமானவர்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்ததும், “ஆஹா மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால் மேலேப் போகப்போக இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ” என்று நினைத்து அடுத்த தளத்திற்குச் செல்ல முடிவெடுத்தார்.
நான்காவது தளம் அறிக்கைப் பலகையில்…
“இந்தத் தளத்தில் இருக்கும் ஆண்கள் வேலை உள்ளவர்கள்… கடவுள் நம்பிக்கை உளளவர்கள்… குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்… வசீகரமானவர்கள் மற்றும்
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உடையவர்கள்…” என்றிருந்து.
இதை விட வேற என்ன வேணும்… நல்ல குடும்பம் அமைக்கலாமே?
“கடவுளே… எனக்கு மேல என்ன இருக்குன்னு தெரிந்தே ஆகணும்…” அப்படின்னு முடிவு பண்ணிட்டு அதற்கடுத்த தளத்திற்கும் செல்வதென முடிவு செய்தார்.
ஐந்தாவது தளம் அறிக்கைப் பலகையில்…
“இந்தத் தளத்தில் இருக்கும் ஆண்கள் வேலை உள்ளவர்கள்… கடவுள் நம்பிக்கை உளளவர்கள்… குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்… வசீகரமானவர்கள்…
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்… மற்றும் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்…” என்றிருந்தது.
அதைப் பார்த்த அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சி அதிகமானது.
“சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே… அங்கே என்ன இருக்குன்னு பார்க்காமல் எப்படி முடிவு செய்வது?” என்று நினைத்தபடி ஆறாவது தளத்திற்குச் சென்றாள்.
அங்கேயிருந்த அறிக்கைப் பலகையில்…
“இந்தத் தளத்தில் ஆண்கள் யாரும் இல்லை… வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது… இந்தத் தளத்தை அமைத்ததற்கு காரணமே, உங்களை எவ்வகையில் திருப்திப்படுத்த முடியாது என்பதை நிரூபிப்பதற்குத்தான்…! எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி…!” என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணுக்கு இலேசாகத் தலையைச் சுற்றியது…
“பார்த்துக் கவனமாக கீழே படிகளில் இறங்கவும்…” அப்படின்னு அங்கிருந்த படிக்கட்டில் போட்டிருந்தது…
இந்தக் கதை நம் அனைவருக்குமே பொருந்தும்.
அந்த கடையின் உரிமையாளர்தான் இறைவன்… அந்த கடைதான் இந்த உலகம்… அந்த இளம்பெண்தான் நாம் அனைவரும்…
வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் ஏதாவது ஒரு வகையில் இருக்கத்தான் செய்கின்றன…
நாம் தான் வசதிகளை மேம்படுத்த அடுத்த அடுத்த கட்டத்துக்குச் சென்று கொண்டே இருக்கிறோம். முன்னோக்கிச் செல்வது தான் வளர்ச்சி… இருப்பினும் படிப்படியாகச் செல்வதில்தான் முழுமையான மகிழ்ச்சியினை அடையமுடியும்.
அதாவது, தற்போது இருக்கும் நிலையிலிருந்து மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டே ஒவ்வொரு நிலையாக அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
வாழ்க்கையின் மேல்நிலையை எதிர்பார்த்து, தற்போது கிடைத்த ஒவ்வொரு நிலையையும் ஒதுக்கிக் கொண்டே சென்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் போய்விடும்.
மனநிறைவு ஒன்றுதான் மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.