ராமனின் மனைவியான சீதையை ராவணன் தூக்கிச் சென்ற போது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.
அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து, கிஷ்கிந்தா வந்த ராமரிடம் கொடுத்தான்.
அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஆழமாகக் கவனித்த ராமர், அவையனைத்தும் சீதை அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் அவரது மனக்கண் முன் தோன்றி அவரை மேலும் வருத்தியது.
“தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களை எல்லாம் பார்! இவை அனைத்தும் உன் அண்ணி அணிந்திருந்தவைதானே?” என்றபடி அவைகளைத் தம்பியிடம் கொடுத்தார்.
அதையெல்லாம் பெற்றுக் கொண்ட லட்சுமணன் கலங்கிய கண்களுடன் காதணியை எடுத்தான். உடனே அதைத் தனியே வைத்தான். வளையல்களை எடுத்தான், அதையும் தனியாக விலக்கி வைத்தான்! கழுத்தில் அணியும் ஆபரணத்தை எடுத்தான், அதையும் விலக்கினான். அடுத்து காலில் அணியும் சிலம்பை எடுத்தான்.
உடனே, “அண்ணா... இது அண்ணியினுடையதுதான். சந்தேகமே இல்லை” என்று வருத்தம் தெரியச் சொன்னான்.
அண்ணியின் பாதங்களைத் தவிர சீதையின் திருவுருவத்தை ஏறெடுத்தும் பார்க்காதவன் அவன். பாதசேவை மாத்திரம் செய்தவன். எனவே, சீதையின் மற்ற ஆபரணம் எதையும் அவன் பார்த்ததில்லை. திருவடியில் அணிந்திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டு சொன்னான்.