மிகப் பெரிய மலை ஒன்று இருந்தது. அம்மலையில் பொன்னாக எச்சமிடுகின்ற அபூர்வப் பறவை ஒன்று நெடுநாளாக வாழ்ந்து கொண்டிருந்தது.
ஒருநாள் அந்த மலைப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த வேடன் ஒருவன் தற்செயலாக அந்தப் பறவை பொன்னாக எச்சமிடுவதைப் பார்த்து விட்டான்.
"ஆஹா! பொன்னையே எச்சமாக இடுகின்ற இப்படியொரு பறவையை இதுவரை நான் பார்த்ததேயில்லையே" என்று ஆச்சரியமடைந்தான்.
வேடன்தானே. பிடிக்காமல் விடுவானா?
உடனே அந்தப் பறவையைப் பிடிக்கத் தகுந்த இடம் பார்த்து வலை விரித்தான். மறைந்து கொண்டான்.
இந்த வலையின் விஷயம் தெரியாமல் அந்தப் பறவை அதில் வந்து மாட்டிக் கொண்டது.
பறவையைக் கைப்பற்றிக் கொண்ட வேடன் முதலில் தன் குடிசைக்குக் கொண்டு போக நினைத்தான். ஆனால் திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றி அவனைப் பயமுறுத்தியதுடன் தயக்கமும் அடைந்தான்.
"இந்தப் பொன் எச்சமிடும் பறவை நம்மிடமிருப்பதை அரசன் அறிந்து விட்டால்...? பிறகு பறவை பறித்துச் செல்லப்படுவதுடன் பலனும் ஒன்றுமில்லாமல் போகும்." என்று யோசித்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இதை நாமே அரசனிடம் கொண்டு போய்க் கொடுத்து அரசன் அளிக்கும் பரிசையாவது வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அரண்மனைக்குச் சென்றான்.
அரசனிடம் அந்தப் பறவை குறித்த சிறப்பைக் கூறினான்.
அதைப் பெற்றுக் கொண்ட அரசன் அவனுக்குப் பரிசுக் கொடுத்து அனுப்பியதுடன் அப்பறவையைத் தங்கக் கூண்டில் அடைத்து வைக்கச் செய்தான்.
பொன் எச்சமிடும் அபூர்வப் பறவை என்று இப்படி கூண்டுக்குள் அடைத்து வைத்தது மந்திரிக்குப் பிடிக்கவில்லை.
அவர் அரசனிடம், "அரசே, அந்த வேடன் பேச்சைக் கேட்டு அந்தப் பறவையை ஏன் இந்தக் கூண்டுக்குள் அடைத்து சிறைப்படுத்துகிறீர்கள்? அதை விட்டு விடுங்கள்" என்று இரக்கம் குழையக் கூறினார்.
அரசன் இரக்கம் குணமுடையவர் என்பதால் மந்திரி சொன்னதும் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் அந்தக் கூண்டிலிருந்து அந்தப் பறவையை விடுவித்தான்.
விடுவிக்கப்பட்ட பறவை சற்று தூரம் சென்று அமர்ந்தது.
"நான் முதல் மூடன், வேடன் இரண்டாவது மூடன், அரசன் மூன்றாவது மூடன், மந்திரி நான்காவது மூடன்" என்று உரக்கச் சொல்லிவிட்டு தன்னுயிர் பிழைக்கப் பறந்து சென்றது.
வலை இருப்பது தெரியாமல் அதில் மாட்டிக் கொண்டதால் தன்னையும், கைக்குக் கிடைத்த அபூர்வப் பொருளைத் தானே அனுபவிக்காமல் அரசனிடம் வலியச் சென்று தந்ததால் வேடனையும், அபூர்வத் தன்மையைப் பொறுத்திருந்து அறிய முயற்சிக்காமல், ஆராயாமல், மந்திரியின் ஆலோசனையை ஏற்றுவிட்டதால் அரசனையும், உண்மையை உணரமாட்டாமல் புத்திசாலி என்று நினைப்புடன் அறிவுரை கூறியதால் மந்திரியையும் அப்பறவை மூடர்கள் என்று வரிசைப்படுத்திச் சொன்னது சரிதானே...?