பெரிய திருடனாயிருந்த ஒருவனின் மகன் தன் தந்தையிடம் சென்று, "அப்பா வயதாகி விட்ட உங்களால் இனி இந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்ய முடியாது , பரம்பரையாக நாம் செய்து வரும் இந்தத் தொழிலை இனி எனக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று கேட்டான்.
அவனுடைய தந்தை பதில் ஒன்றும் சொல்லவில்லை.
அன்றிரவு தன் மகனையும் அழைத்துக் கொண்டு ஒரு வீட்டினுள் நுழைந்தார்.
ஓர் அறையைக் காட்டி , "அங்கே என்ன இருக்கிறது பார் " என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்து கதவைத் தாளிட்டார்.
அந்த சப்தத்தில் அந்த வீட்டிலிருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.
தந்தை மெதுவாக அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
உள்ளே அகப்பட்டுக் கொண்ட மகன் பயந்து விட்டான்.
அவனுக்கு அந்த இடத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று பயம் தொற்றிக் கொண்டது. தந்தை இப்படி நம்மை மாட்டிவிட்டுச் சென்று விட்டாரே என்று அவர்மேல் கோபம் வேறு வந்தது.
எப்படி இந்த இடத்திலிருந்து வெளியேறுவது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது.
பூனை போல் மெதுவாகக் குரல் கொடுத்தான்.
அந்த வீட்டு வேலைக்காரன் ஒருவன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றியபடி அந்த அறையின் கதவைத் திறந்தான்.
உடனே இவன் அந்த அறையிலிருந்து வெளியேறி ஓடினான். எல்லோரும் அவனைத் துரத்தினர்.
சாலையோரத்திலிருந்த கிணற்றில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு அருகிலிருந்த புதரினுள் சென்று மறைந்து கொண்டான்.
தேடி வந்தவர்கள் கல் விழுந்த சப்தத்தைக் கேட்டு , அவன்தான் கிணற்றில் குதித்து விட்டான் என்று நினைத்துத் திரும்பிச் சென்று விட்டனர்.
வீடு திரும்பிய மகன், நடந்த கதையைத் தந்தையிடம் சொல்லும் ஆர்வத்தில் தன் கோபத்தை மறந்தான்.
ஆனால் அவன் தந்தையோ, "நீ எதற்காகக் கதை சொல்ல வேண்டும்? நீதான் திரும்பி வந்து விட்டாயே, அது போதும். நம் தொழிலில் நீ தேர்ச்சி பெற்று விட்டாய் மகனே" என்றார்.