ஒரு சமயம் அக்பர் ஒரு பெரிய தர்பார் நடத்தினார். அதற்கு அந்நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால் பீர்பால் மட்டும் அங்கு வரவில்லை.
சிறிது நேரம் கழித்து பீர்பால் வந்து சேர்ந்தார்.
இதைக் கண்டு கோபமடைந்த அக்பர், "தர்பாருக்கு வர ஏன் இவ்வளவு நேரம்?" என்று கேட்டார்.
"ஒரு குழந்தையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். அதனால்தான் நேரமாகி விட்டது." என்றார் பீர்பால்.
"ஒரு குழந்தையைச் சமாதானப்படுத்தி வர இவ்வளவு நேரமா?" என்று அக்பர் கேலியாகக் கேட்டார்.
"மன்னரே, குழந்தையைச் சமாதானப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல"
"எளிதான காரியமில்லையா? நான் சமாதானம் செய்து காண்பிக்கிறேன்"
"அப்படியானால் நான் குழந்தையைப் போல் நடிக்கிறேன். நீங்கள் சமாதானம் செய்து காண்பியுங்கள்" என்றார் பீர்பால்.
அக்பரும் அதற்குச் சம்மதித்தார்.
பீர்பால் ஒரு குழந்தையைப் போல் அழத் தொடங்கினார்.
உடனே அக்பர் தம் சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, "அழாதேடா கண்ணா, உனக்கு என்ன வேண்டும் கேள் நான் தருகிறேன்" என்றார்.
"எனக்குக் கரும்பு வேண்டும், கரும்பு வேண்டும்." என்று பீர்பால் அழுதார்.
அக்பர் உடனே கரும்பு கொண்டு வர உத்தரவிட்டார்.
கரும்பும் கொண்டு வரப்பட்டது.
அந்த முழுக்கரும்பை பீர்பாலிடம் அக்பர் காட்டினார்.
பீர்பால் குழந்தையைப் போல் அழுது கொண்டே இருந்தார்.
"எதற்காக அழுகிறாய்? கரும்பு கேட்டாய் கொண்டு வந்து விட்டேன். இன்னும் என்ன வேண்டும்?" என்று அக்பர் கேட்டார்.
"கரும்பைத் துண்டு போட வேண்டும்" என்று பீர்பால் அழுதார்.
உடனே அக்பர் கரும்பைத் துண்டு போடச் சொன்னார்.
கரும்பும் துண்டு போடப்பட்டது.
இருப்பினும் பீர்பால் அழுகையை நிறுத்தவில்லை.
"என்னடா கண்ணா அழுகையை நிறுத்தவில்லை. நீ கேட்டபடி கரும்பைத் துண்டு போட்டுக் கொடுத்து விட்டோமே" என்றார் அக்பர்.
"ஏன் கரும்பைத் துண்டு பண்ணினாய்? எனக்கு அதை முழுதாகக் கொடு. எனக்கு முழுக்கரும்புதான் வேணும்" என்றபடி மேலும் அழுதார்.
"அப்படியா, உனக்கு வேறு கரும்பு தரச் சொல்கிறேன்" என்றார் அக்பர்.
"அதெல்லாம் முடியாது. இந்தத் துண்டுகளையெல்லாம் ஒட்டி முழுக் கரும்பாய்த் தரவேண்டும்" என்று குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தார்.
"குழந்தையைச் சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டம்தான். நான் ஒப்புக் கொள்கிறேன்" என்றார் அக்பர்.
பீர்பால் அழுகையை நிறுத்தினார்.