காடு ஒன்றில் வலிமையான காளை மாடு ஒன்று இருந்தது. தன் கொம்புகளால் மலையைக் கூட பெயர்த்து எடுக்கும் ஆற்றலுடன் விளங்கியது. ஆனால் அது எப்பொழுதும் கோபம் கொள்வதில்லை. அமைதியாகவே இருக்கும்.
புல் மேயச் சென்ற அது ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தது.
அந்த மரத்திலிருந்த குரங்கு ஒன்று கீழே இறங்கி அந்தக் காளையின் முதுகில் அமர்ந்து கொண்டு கொம்புகளைப் பிடித்து ஆட்டுவதும் தரையிலிருந்து புழுதியை எடுத்து அதன் மேல் தேய்த்தது.
காளையோ குரங்கின் குறும்பைத் தாங்கிக் கொண்டு பொறுமையாக இருந்தது.
இது தினமும் நடந்து வந்தது.
இதைக் கவனித்த புறா ஒன்று, "காளையே, நீ அந்தக் குரங்கு செய்யும் குறும்புகளைப் பொறுத்துக் கொள்கிறாய்? நீ எதிர்த்தால் அதனால் தாங்க முடியுமா? உன் வலிமையை அதனிடம் காட்டி உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாமே?" என்றது.
"புறாவே! நீ சொல்வது உண்மைதான். அந்தக் குரங்கு செய்யும் குறும்புகளை எல்லாம் நான் பொறுத்துக் கொள்கிறேன். அதைக் கொன்று நான் பாவம் தேட வேண்டுமா? அதற்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கொடியவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. நாம் தண்டனை தந்து பாவத்தைத் தேட வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்றது.
புறாவிற்கும் காளை சொன்னது சரி என்று பட்டது.
அடுத்த நாள் இன்னொரு காளை மாடு அந்த மரத்தின் கீழ் வந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது.
அங்கிருப்பது வேறொரு காளை மாடு என்பது தெரியாமல் அந்தக் குரங்கு தனது குறும்புத் தனங்களை செய்தது. அதன் கொம்புகளைப் பிடித்து ஆட்டியது.
கோபம் கொண்ட காளை மாடு தன் கொம்புகளால் அந்தக் குரங்கைக் குத்திக் கொன்றது.