கைலாயத்திலிருந்து பூமிக்கு தன் துணைவியார் உமையாளுடன் புறப்பட்டார் சிவபெருமான்.
உமையம்மை சிவபெருமானிடம், "நீங்கள் பூவுலகில் யாருக்காவது உதவி செய்ய வேண்டும். அதை நேரடியாகச் செய்ய வேண்டும்." என்று சொன்னார்.
சிவபெருமான், "மனிதன் எவ்வளவு உதவிகளைச் செய்தாலும் திருப்திப்பட மாட்டான்." என்றார்.
உமையம்மையும் இந்த ஒரு முறை நேரடியாகச் செய்து பாருங்கள் என்றார்.
சிவபெருமானும் அதற்குச் சம்மதித்து "நீ யாருக்கு உதவி செய்யச் சொல்கிறாயோ, செய்கிறேன்" என்றார்.
இருவரும் பூலோகம் வந்துவிட்டனர். அவர்கள் பல இடங்களைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர்.
ஒரு குடிசையில் உண்ண உணவில்லாமல் ஒரு வயோதிகன் படுத்துக் கிடந்தான்.
"இவனுக்கு உதவலாம்" என்றார் உமையம்மை.
அவனை எழுப்பிய சிவபெருமான், "நான் உனக்கு உதவி புரிய வந்திருக்கிறேன். நான் எதைத் தொட்டாலும் பொன்னாக மாறிவிடும்" என்றபடி அருகிலிருந்த மண் பானை ஒன்றைத் தொட்டார். அது தங்கப் பானையாக மாறியது.
அந்த வயோதிகன் ஆச்சர்யமடைந்தான். ஆனால் அவனிடம் மகிழ்ச்சி இல்லை.
இந்தத் தங்கம் உனக்குப் போதாது என்று நினைக்கிறாயா?" என்றபடி அங்கிருந்த விறகுக் கட்டைகளைத் தொட்டார். அவையெல்லாம் தங்கமாக மாறின.
ஆனால் அந்த வயோதிகன் அப்போதும் மகிழ்ச்சி அடையவில்லை.
"உன்னிடம் இப்போது இருக்கும் இந்த செல்வம் இந்த உலகத்தில் யாரிடமும் இல்லை. இருந்தாலும் நீ மகிழ்ச்சி அடையவில்லையே. நான் என்ன செய்தால் நீ மகிழ்ச்சி அடைவாய்?" என்று கேட்டார்.
"சிவபெருமானே நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் உங்கள் ஆள்காட்டி விரலை மட்டும் எனக்கு வெட்டித் தாருங்கள். எனக்குத் தேவையான தங்கத்தை நானே பெற்றுக் கொள்வேன்" என்றான் அவன்.
தன் கணவர் ஆள்காட்டி விரலைத் தந்து விடுவாரோ என்ற பயத்தில் உமையாள் அவரை அழைத்துக் கொண்டு கைலாயம் திரும்பினார்.