திருடன் ஒருவன் ஆடு ஒன்றைத் திருடினான். அந்த ஆட்டை விற்பதற்காகப் பக்கத்து ஊருக்கு ஓட்டிச் சென்றான்.
களைப்பு அடைந்த அவன் ஒரு மரத்தின் நிழலில் தங்கி ஓய்வு எடுத்தான். அங்கே இன்னொருவன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அவன் இடுப்பில் ஒரு பை ஒன்று இருந்தது. அதற்குள் என்ன உள்ளது? என்று பார்க்கும் ஆர்வம் திருடனுக்கு ஏற்பட்டது.
அந்தப் பையை எடுத்த அவன் அதற்குள் தங்க வளையல்கள் இரண்டு இருப்பதைப் பார்த்தான்.
அந்தப் பையை எடுத்துக் கொண்ட அவன், "தன்னால் இவன் இழப்பு அடைய வேண்டாம். தங்க வளையல்களுக்குப் பதில் ஆட்டை எடுத்துக் கொள்ளட்டும்" என்றபடி ஆட்டை அங்கேயேக் கட்டிச் சென்றான்.
பக்கத்து ஊருக்குச் சென்ற அவன், அங்குள்ள ஒரு நகைக்கடைக்குச் சென்றான். தங்க வளையல்களைக் காட்டி "இதற்கு என்ன விலை தருவீர்கள்?" என்று கேட்டான்.
அந்தத் தங்க வளையல்களை வாங்கிப் பார்த்த கடைக்காரர், "என் கடையிலேயே திருடிவிட்டு இங்கேயே விற்கவும் வந்திருக்கிறாயா? இவனைப் பிடித்துக் கட்டுங்கள்" என்று சப்தமிட்டவாறு கடைப் பணியாளர்களுக்கு கட்டளையிட்டார்.
கடைப் பணியாளர்கள் அவனைக் கட்டி வைத்து உதைத்தார்கள்.
அங்கே மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொருவன் விழித்துப் பார்த்த போது, தான் வைத்திருந்த பை இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான்.
யார் திருடி இருப்பார்கள் என்று சுற்றுமுற்றும் தேடினான். அங்கு கொழுத்த ஆடு ஒன்று மரத்தில் கட்டப்பட்டு இருப்பதைப் பார்த்தான்.
கடவுள்தான் தன் மோதிரத்துக்குப் பதில் இந்த ஆட்டைக் கட்டி வைத்து உள்ளார் என்று நினைத்தான்.
மகிழ்ச்சியுடன் அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அடுத்த ஊரை அடைந்தான்.
அங்கிருந்த ஒருவனிடம், "இந்த ஆட்டை விற்க வந்துள்ளேன். என்ன விலை தருவீர்கள்?" என்று கேட்டான்.
கோபம் கொண்ட அவர் எல்லோரையும் கூவி அழைத்தார்.
"என் ஆட்டைத் திருடி என்னிடமே விற்கக் கொண்டு வந்திருக்கிறான். இவனைச் சும்மா விடக்கூடாது." என்று கத்தினார்.
அங்கிருந்த அனைவரும் அவனைப் பிடித்துக் கட்டி வைத்து உதைத்தார்கள்.