ஒரு ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். அந்த ஊர் மக்கள் அவரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள். அவரும் ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
மக்களுக்கு அறிவுரை சொல்வதை விட நடைமுறையில் செய்து காட்டி அவர்கள் உணர வைப்பதே சிறந்தது” என்று நினைத்தார் அவர்.
சிலரை அழைத்த அவர், "உங்களுக்கு கூலி தருகிறேன். இந்தப் பெரிய பாறாங்கல்லை மலை உச்சிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்.
அவர்களும் மிக முயற்சி செய்து அந்தப் பாறாங்கல்லை மலை உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தினார்கள்.
அங்கு வந்த அவர் அந்தப் பாறையை அங்கிருந்து தள்ளி விட்டார். அது வேகமாகக் கீழே போய்ச் சேர்ந்தது.
கீழே இறங்கிய அவர் அந்தப் பாறாங்கல்ல்லை மீண்டும் மேலே கொண்டு போகச் சொன்னார். அவர்களும் அப்படியே மேலே கொண்டு போனார்கள்.
இவர் மேலே போய் மீண்டும் அந்தப் பாறையைக் கீழே தள்ளி விட்டார்.
இப்படியே அவர் பாறையை மேலே கொண்டு செல்லச் சொல்வதும் உருட்டி விடுவதுமாக இருந்தார்.
இதைப் பார்த்தவர்கள் அவருக்குப் பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்கள். “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“வாழ்க்கையில் ஒருவன் நல்லொழுக்கத்துடன் சிறிது சிறிதாக முன்னேற வேண்டும். ஒருவன் பெருமையடைய வேண்டுமானால், இந்தப் பெரிய பாறாங்கல்லை மேலே கொண்டு செல்வதைப் போல் கடுமையான முயற்சி செய்ய வேண்டும். ஆனால் உயர்ந்த நிலையை அடைந்தவர் சிறு தவறு செய்தாலும் அங்கிருந்து ஒரு சில நொடிக்குள் கீழே சென்று விடுவார்கள். மீண்டும் உயர்ந்த நிலையை அடைய அதிக முயற்சி செய்தால்தான் முடியும்.” என்றார்.
உண்மைதானே?