அரசாட்சியைத் துறந்த இராமருடன் சீதையும் இலக்குவனனும் கங்கைக் கரையை அடைந்தனர். அப்பொழுது குகன் அங்கு வந்து இராமரை வணங்கினான்.
“கங்கை ஆற்றைக் கடக்க உதவி செய்ய வேண்டும்” என்றார் இராமர்.
குகனும் இராமனின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மூவரையும் தன் படகிலேயே ஏற்றி அக்கரையில் கொண்டு போய் விட்டான்.
சீதையைப் பார்த்து இராமர், “குகனுக்கு ஏதேனும் பரிசு தா” என்றார்.
அதற்குக் குகன், “அய்யா, ஒரே தொழிலைச் செய்யும் இருவர் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் பொழுது கூலி பெறுதல் முறையல்ல. ஒரு கொல்லன் இன்னொரு கொல்லனிடம் கூலி வாங்க மாட்டான். அது போலப் படகோட்டியான நான் இன்னொரு படகோட்டியான உங்களிடம் கூலி பெறுவது முறையாகாது. அதனால் எதையும் பெற்றுக் கொள்ள மாட்டேன்” என்றான்.
“நானும் உன்னைப் போல் படகோட்டியா?” என்று சிரித்துக் கொண்டே இராமர் கேட்டார்.
“நான் கங்கை ஆற்றைக் கடக்க உதவுகிறேன். என்னைப் போலவே நீங்களும் மக்கள் பிறவிக் கடலைக் கடக்க உதவி செய்கிறீர்கள். அதனால் நீங்களும் படகோட்டி. நானும் படகோட்டி” என்று விளக்கமளித்தான் குகன்.