அறிவு பக்திக்கு முந்திச் செல்லலாமா...?

பணக்காரனாக மாளிகை வீட்டில் வசிப்பதை விட, ஏழையாகக் கடவுளின் அருளைப் பெற்று வாழ்வது மேலானது.
- எகிப்திய மதம்

சிவ வழிபாட்டுக்குரிய மலர்கள் எட்டு. அவையாவன: கொல்லாமை, புலனடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு.
- சிவாகமங்கள்

மாலுவக் கொடி கடம்ப மரத்தைச் சுற்றிப் படர்ந்து மரத்தையே அமுக்கி விடுகிறது. அதே போல ஒருவனுடைய தீவினையே அவனை அமுக்கிவிடுகிறது; பகைவர்கள் செய்ய விரும்பும் தீமையை அவன் தானாகவே செய்து கொள்கிறான்.
- புத்தர்

ஆத்மா பிறப்பு இல்லாதது. பிறப்பு இல்லாத காரணத்தால் இறப்பும் இல்லாதது. ஜனன மரணம் இல்லாத ஆத்மாவுக்குப் பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், குறைதல், மரணம் என்பவையும் இல்லை.
- வேதாந்தம்

ஒருவன் தனக்கு என்ன வேண்டுமென்று விரும்புகிறானோ, அதுவே தன் சகோதரனுக்கும் வேண்டுமென்று விரும்புகிறவன் தான் உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவன்.
- நபிகள் நாயகம்

மக்கள் ஒவ்வொருவரும் சுயநலம், பேராசை ஆகியவற்றைப் பொது நலத்திற்காகவும் நாட்டு நலனுக்காகவும் விட்டுக் கொடுப்பார்களேயானால், நாடு இன்றுள்ள நிலையை விட மிகச் சிறப்பான நிலையில் அமையும்.
- டாக்டர் ஸர் எஸ். ராதாகிருஷ்ணன்

உயர்ந்த பண்புக்கு அடிப்படை சில்லறைத் தியாகங்கள் .
- எமர்சன்

தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை. ஆனால் தெய்வத்தை நம்பிச் செல்வம் சேர்க்க வேண்டும். இது என் கொள்கை.
- பாரதியார்

ஜீவனுக்குச் சுதந்திரம் இல்லை. ஆண்டவனைச் சார்ந்திருப்பதே ஜீவனுக்குரிய நிலை. ஜீவன் வாழ்வதும் இயங்குவதும் எல்லாம் இறைவனின் அருளால் தான்.
- ஸ்ரீராமானுஜர்

ஆசையால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல் ஓடித் திரிகிறார்கள்.
- புத்தர்

தலை நரைத்த முதியவரின் எதிரில் உட்காராமல் எழுந்து நில். முதியோரையும் பெரியோரையும் மதித்து அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்.
- யூத சமயம்

நண்பர்களும் உறவினர்களும் ஒருவனைச் சுடுகாட்டில் விட்டு வந்து விடுகிறார்கள்; அவனோடு யாரும் கூடப் போவதில்லை. அவன் செய்த பாவ புண்ணியச் செயல்களே அவனைத் தொடருகின்றன.
- மகாவீரர்

உன் காலத்தை எப்போதும் உபயோகமாகவே செலவு செய். சோம்பலுக்கு இடம் தராதே. செய்ய வேண்டியதை உடனே செய்துவிடு. வேடிக்கைகளில் பொழுது போக்குவது வேலை முடிந்த பிறகே தவிர, வேலை முடியும் முன்னால் அல்ல.
- ஸர் வால்டர் ஸ்காட்

மனச்சான்றே மனிதனுடைய இதயத்திலுள்ள கடவுளின் பிரதிநிதி ஆகும். நல்லவராக வாழ விரும்புகிறவர்கள் நல்வாழ்வு பெறுவர். தூய மனச்சான்று உடையவர்கள் மட்டுமே சுக வாழ்வு பெறுவர்.
- சாக்ரடீஸ்

ஒவ்வொரு நல்ல செயலும் தானமே. புன்முறுவலுடன் உங்கள் சகோதரர்களை நோக்குவதும் தானமே. உங்கள் மனிதர்களை நல்ல செயல்கள் செய்யும்படி தூண்டுவதும் தானமே. திசை தெரியாமல் அலைவோரை சரியான வழியில் கொண்டு வருவதும் தானமே. தானம் செய்யும் நல்ல மனிதன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வான்.
- குரான்

கடவுள், ஒரு மனிதனை, நீ எந்த இனத்தான், எந்த ஜாதியான் என்று கேட்க மாட்டார். நீ செய்திருப்பது என்ன என்றே கேட்பார்.
- சீக்கியம்

நன்மை செய்வது புனிதமானது; தீங்கு செய்வது அசிங்கமானது; தீங்கு செய்பவர்களைத் தேவர்கள் வெறுக்கிறார்கள்.
- ஷிண்டோ மதம்

மதம் உள்ள போதே மனிதர்கள் நாம் காணுகிறபடி இவ்வளவு கெட்டவர்களாய் இருந்தால், மதம் இல்லாவிட்டால் இன்னும் எவ்வளவு கெட்டவர்களாய் இருப்பார்கள்?
- பிராங்ளின்

அறிவு எப்போதும் பக்திக்குப் பின்னரே செல்ல வேண்டும். அதை முந்தவும் கூடாது; அழிக்கவும் கூடாது.
- தாமஸ் கெம்பிஸ்

நம் தவறுகளுக்காக நாம் வருந்துவதற்கும், இன்றைய நிலையை விட மேலான பரிசுத்த நிலையை அடைய விரும்புவதற்கும் சின்னமாக விளங்குகிறது பிரார்த்தனை.
- காந்தியடிகள்

தவறுகளுக்குத் தண்டனை தராத இடம் தாயின் நெஞ்சமெனும் நீதிமன்றமே.
- சாக்ரடீஸ்

முள் இல்லாத ரோஜா கிடையாது. கலப்பில்லாத நன்மை இந்த உலகில் இல்லை. முழு நலமாய் இருப்பது பரம்பொருள் ஒன்றேயாகும்.
- ராமதீர்த்தர்
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.