எவனிடம் கோபம், வெறுப்பு, கசப்புணர்வு, உயிர்களிடத்து தயை இல்லாமை, அவற்றைத் துன்புறுத்தி இன்பம் அடையும் தன்மை ஆகியவை உள்ளதோ அவனே, ‘ஜாதிப்பிரஷ்டன்’ என்கிறார் புத்தபெருமான்.
ஜாதிப்பிரஷ்டன் என்றால், ஒழுக்கம் தவறியவன் என்று பொருள்.
யாரெல்லாம் ஒழுக்கம் தவறியவன் என்று அவர் குறிப்பிடுகிறார் தெரியுமா?
1. வாங்கிய கடனைத் திருப்பித் தராதவன்; திரும்பித் தருவதில் காலம் தாழ்த்துபவன்
2. பிறரிடமிருந்து பலாத்காரத்தால் பொருளை அபகரிப்பவன்
3. பொய் சாட்சி சொல்பவன்
4. பெண்களிடம் தகாத முறையில் நடப்பவன்
5. கதியற்ற வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிட்டவன்
6. உற்றார் உறவினரிடம் கடும் சொற்கள் கூறி மனம் புண்படுத்துபவன்
7. தன்னிடம் ஆலோசனை கேட்பவருக்குத் தவறான வழி கூறுபவன்
8. தான் செய்த பாவச் செயல்களை மறைக்கும் பொய் வேடக்காரன்
9. உண்ணும்போது உணவு கேட்டு வரும் யாசகர்களை நிந்தித்து உணவளிக்காமல் அனுப்புகிறவன்
10 .ஒன்றும் தெரியாமல் பிறரது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் பொய் ஜோதிடன்
11. தன் புகழைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்பவன்
12. பிறரிடம் உதவி பெற்று அவர்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்ய மறுப்பவன்
13. அகங்காரத்துடன் பிறரைக் குறை கூறுபவன்
14. கடவுளை உள்ளுக்குள் நம்பிக்கொண்டு வெளியில் நம்பாதவன் போல் நடிப்பவன்
15. பேராசை கொண்டு சினம் மேலிட்டு, பாவ எண்ணங்கள் நிறைந்து, வெட்கமின்றிப் பிடிவாதமாகத் திரிபவன்
16. கிராமங்களையும் நகரங்களையும் அழித்து போக்குவரத்துக்குத் தடை செய்பவன்.