விஷ்னுபுராணத்தில் இறைவனைப் பற்றிய சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பாவங்கள் நீங்குவதற்கான வழிமுறை ஒன்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
1. எவன் உள்ளத்தில் குடி கொண்டால் அவித்யை வடிவமாகிய பரந்த யோகமாயையை ஒருவன் கடப்பானோ, அந்த அளவு கடந்த ஞானமே உருக்கொண்ட பகவானுக்கு நமஸ்காரம்!
2. எவரை நினைத்த மாத்திரத்தில் எல்லா மங்களங்களும் வந்து சேர்கின்றனவோ, அந்தப் பிறப்பற்ற பரம புருஷனாகிய ஹரியை நான் எப்போதும் சரணடைகிறேன்.
3. உலகிற்கப்பாற்பட்ட இறைவனின் வடிவம் 'சத்' என்ற சொல்லாலும், அட்சரம் என்னும் 'ஓம்' என்ற சொல்லாலும் குறிப்பிடப்படுகிறது.
4. குரு, தெய்வம், சான்றோர்கள், தாய், தந்தை ஆகியவர்களைப் பூஜிப்பதற்காகச் செலவழிக்கும் காலமே பயனுடைய காலமாகும். இவர்களைப் பூஜிக்காமல் எந்தக் காலம் கழிகிறதோ அந்த ஆயுள் பகுதி வீண்.
5. ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
தேவர், அசுரர், மனிதர் அடங்கிய இந்த உலகம் முழுவதும் என்னைத் தவிர வேறில்லை. அவித்தையால் மதி மயங்கிய மனிதர்கள் பேதத்தைக் காண்பவர்களாகி பேதத்தைப் பேசுகிறார்கள், வேற்றுமையைக் காண்கிறார்கள்.
6. சர்வேஸ்வரனிடம் நாமம், ஜாதி முதலிய கற்பனைகள் எதுவுமில்லை. அது சத்தாகவும், சித்தாகவுமே திகழ்கிறது. அது உடல் படைத்த ஆத்மாவிற்கும் அப்பாற்பட்டது. அதுதான் பரபிரம்மம், பரமபதம், பரமாத்மா, சர்வேஸ்வரன், விஷ்ணு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதை நாடியடைந்தவன் பிறப்பு - இறப்பு என்ற சுழலுக்குத் திரும்பி வருவதில்லை.
7. அனைவருக்கும் ஆதாரமாகவும் ஆத்மாவாகவும் இருக்கும் பரமாத்மா, வேதங்களிலும் வேதாந்தங்களிலும் 'விஷ்ணு' என்ற பெயரால் போற்றப்படுகிறார்.
8. நித்தியமான பரமாத்மாவுக்குப் பகலுமில்லை, இரவுமில்லை.
9. இறைவன் எல்லாப் பொருள்களிலும் உள்ளே வசிக்கிறார். அவைகளும் அவரிடம் உறைகின்றன.
10. இறைவனைப் பார்ப்பதற்கு சாஸ்திரங்களைக் கற்பதும், யோகமும் கண்களாகும். அவரை ஊனக் கண்களால் பார்க்க இயலாது.
11. யோகஸ்வரூபத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் லயித்த முனிவன் அதிலிருந்து நழுவுவதில்லை.
12. ஒப்புயர்வற்ற மகிழ்ச்சியும், ஒப்புயர்வற்ற சுகமுமே வடிவமாக இருக்கும் ஒரு தெய்விக நிலைதான் முக்தியாகும்.
13. காந்தம் இரும்பைத் தனது சக்தியால் கவர்வது போல், தியானம் செய்பவர்களைப் பிரம்மம் தன்னுடைய இயல்பிற்கு அழைத்துச் செல்கிறது.
14. மனமே மனிதர்களின் பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணம். விஷயப்பற்றுடைய (உலக ஆசைகள் கொண்ட்) மனம்தான் பந்தம். பற்று நீங்கிய மனம்தான் மோட்சம்.
15. பற்றற்ற நிலையை அடைய விரும்புபவன் மனதை உலக விஷயங்களிலிருந்து திருப்பி, முக்தி எய்துவதற்காக பிரம்மமேயாகிய பரமேஸ்வரனைத் தியானிக்கவேண்டும்.
16. பிரம்மத்தை ஆராய்தறிந்தவன் பிரம்மத்தை அடைவான்.
17. சம்சார துக்கம் என்ற வெயிலால் பொசுக்கப்பட்ட மனம் படைத்த மனிதர்களுக்கு முக்தி' என்னும் மரத்தின் நிழல் ஒன்றே பரம சுகத்தை அளிக்க வல்லது. ஆகையால் அறிவாளிகள் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
18 மனிதன் கெட்டுப் போவதற்கும், கெடுதலிலிருந்து விடுபடுவதற்கும் மனம் ஒன்று தான் காரணம். மனிதன் பற்றினால் கெட்டுப்போகிறான்; பற்றின்மையால் விடுதலையடைகிறான். முயற்சியால் மனதை பிரம்மத்தில் இணைப்பது தான் யோகம்.
19. கங்கா, கங்கா" என்ற பெயரை எங்கிருந்தாலும் (நூறு யோஜனை தூரத்திலிருந்தும்) சொன்னால் எல்லாப் பாவங்களும் நீங்கி விடுதலை அடையலாம்.