இனி அறிவுக்குத் தோற்றுவிடும்!
உ. தாமரைச்செல்வி.

அதிகம் புகழ்ந்தால் கர்வம் ஏற்பட்டுவிடும். எனக்கு அந்த விதமான ஆபத்து பலதடவை ஏற்பட்டிருக்கிறது. அப்படி மண்டைக் கனம் ஏற்பட்டு தலைவீங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தலையைச் சுற்றி இறுக்கமாகத் தலைப்பாகை கட்டியிருக்கிறேன்.
- சி. வி. ராமன்

நான் ஓட்டும் கப்பலில், வெள்ளையர், மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தாய் நாட்டுக்குப் புறப்பட வேண்டும். அந்நியன் கப்பலேறும் நாளே புனிதநாள்.
- வ. உ. சிதம்பரம் பிள்ளை

எனக்கு அலுப்பே கிடையாது; எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம்.
- காமராஜர்

தற்போதைய பரீட்சை முறையானது, பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் வழக்கத்தை உருவாக்கியுள்ளது. இது, நாட்டையே ஏமாற்றுவது போன்றதாகும்.
- தேஷ்முக்

அன்றாடம் வாழ்க்கையில் உழைத்து உழைத்து அலுத்துக் கிடக்கிறவனுக்கும் சரி, பணத்தை ஈட்டி வைத்துக்கொண்டு, மாளிகையில் இருக்கிறவனுக்கும் சரி-கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறவர்களே கலைஞர்கள்.
- நடிகர் தேங்காய் சீனிவாசன்

நமக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு நாவும் இருப்பதற்குக் காரணம், கேள்வி அதிகமாகவும், பேச்சு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
- டயோஜனீஸ்

என்னை அடக்கஞ் செய்த பிறகு கல்லறையின் மேல், “நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று நீங்கள் எழுத வேண்டும்.
- ஜி. யூ, போப்

அரும்பெரும் மனிதர்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை. அந்தந்தப் பருவங்கள் அந்தந்தக் காலத்துக்குத்தகுதியான பிரத்தியேகமான மலர்களை உண்டாக்குவது போல, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மகா புருஷர்கள் உருவாக்கப்படுகின்றனர்.
- ராஜாஜி

வாழ்க்கையில் ஒருவெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும். அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோட்சத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோட்சத்தை விட இது மேலானது.
- புதுமைப் பித்தன்

நான் எந்த ஏணியையும் உதவியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறவில்லே. வெறும் உழைப்பின் சக்தி ஒன்றினாலேயே முன்னுக்கு வந்தேன். எல்லா இளைஞர்களும் என்னேயே பின்பற்ற முயன்று, வீண்மோசம் போக வேண்டாம்.
- ஜார்ஜ் பெர்னாட்ஷா

அரவிந்தர் ஒரு வங்காளி. எந்த ஒரு வங்காளியும் அவரை மறக்கவில்லை. பிரகாசம் ஒரு தெலுங்கர். எந்த ஒரு தெலுங்கனும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுந்தான் வ. உ.சியை மறந்து விட்ட்னர். அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றத் தவறிவிட்டனர்.
- கவிஞர் சுரதா

நான், சில காரியங்களைச் செய்யாமல் விடுவேனே தவிர, செய்கிற பலகாரியங்களை நிறைவாகச் செய்பவன்.
- அறிஞர் அண்ணா

உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது.
- காந்தியடிகள்

உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது.
- ஆஸ்கார் ஒயில்டு

பெண்கள், தங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான்கூட சந்தர்ப்பங்களின் பயனாக உருவானவள்தான்.
- விஜயலட்சுமி பண்டிட்

கதை எழுத நிகழ்ச்சிகள் உதவுகின்றன. அதனால் பலர் கதை எழுதலாம். கட்டுரை எழுதச் சிந்தனை வேண்டும். ஒரு பொருளைப் பற்றிச் சிந்தித்துப் பல பக்கங்கள் அட்ங்கிய நூலாக எழுத வேண்டுமானல் பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்.
- கி. வா. ஜகந்நாதன்

நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை.
- பாரதிதாசன்

கலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்!
- அரு. ராமநாதன்

எனக்குப் பிறகு யார் என்று கேட்கிறார்கள். ஏசுவுக்குப் பிறகு அவருடைய பைபிள்தான். நபிக்குப் பிறகு. அவருடைய குரான்தான். அதுபோல, எனக்குப் பிறகு, என் எழுத்து, என் நூற்கள் இவைகள்தான்.
- பெரியார்

குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு. நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை. தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது. அழுதால்தான் பால் கிடைக்கும்.
- ம.பொ. சி.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.
- சார்லஸ் டார்வின்

இந்தியாவில் தற்காலம் எல்லாரையும் துன்புறுத்தும் பாபம் ஒன்று உள்ளதென்றால் அது அடிமைத்தனமேயாகும். ஒவ்வொருவனும் தலைவனாக இருக்க விரும்புகிறானே ஒழிய, கீழ்ப்படிந்து வேலை செய்ய ஒரு மனிதன்கூட விரும்பக்காணோம்.
- சுவாமி விவேகாநந்தர்

உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்!
- டாக்டர் மு. வரதராசனார்

சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறவர்கள், அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிலிருந்தும், அதன் கொள்கைகளில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றவர்கள்.
- இந்திரா காந்தி

மன நிறைவுக்கு ஒரு வழி. இப்பொழுது உம்மிடம் இருப்பவை எல்லாவற்றையும் நீர் இழந்து விட்டதாக நினைத்துக் கொள்ளும். அவை மீண்டும் கிடைத்து விட்டதாக நினைத்துப் பாரும். உமக்கு உண்மையாகவே மகிழ்ச்சி ஏற்படும்.
- லியோனாட் எம். லியோனாட்

கடவுள் ஒருவனைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ படைக்கவில்லை. எல்லோரையும் ஒரே கோலத்தில்தான் கடவுள் படைக்கிறான். மனிதன் பணக்காரனாவதும் ஏழையாவதும் புத்திசாலித்தனத்தையோ, திறமையையோ தான் பொறுத்தது. சிலர் அதிர்ஷ்டம் என்றும் அதைச் சொல்லுவார்கள்.
- நடிகை செளகார் ஜானகி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.