
காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும் குருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
-கபீர்தாசர்

தினமும் தூங்கி வழிந்து உரையாற்றும் பேராசிரியரை விட, ஒரு ஜோடி செருப்பினைப் புதிதாகச் செய்யும் தொழிலாளி மேன்மையானவன்.
- வேதாந்தி

நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
- கன்பூசியஸ்

எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செய்யக்கூடாது. விவேகமின்மை விபத்தையும் விளைவிக்கிறது. எதையும் ஆராய்ந்து பிறகு காரியங்களைச் செய்பவனை நன்மைகள் தாமாக வந்து அடைகின்றன. செல்வம் எப்பொழுதும் குணங்களைப் பின்பற்றும்.
- பாரவி

துறப்பதுதான் இன்பத்தின் ரகசியம்.
- காந்திஜி

பண்பாடு, கொடூரப்புத்தி படைத்த மனிதனை மிருக நிலையிலிருந்து உயர்த்துகிறது.
- கிரேசியன்

தினமும் இறந்து கொண்டிருப்பதிலிருந்து ஒரேயடியாக விடுதலை பெறுவதே இறப்பு என்பது.
- பட்லர்

கற்றும் கெட்டதைச் செய்பவன் குருடன்; அகம்பாவம் அனர்த்தத்தை விளைவிக்கும்.
- ஆதிசங்கரர்

குறுகிய நோக்கம் கொண்ட அன்பு சுயநலத்தையும், தான் என்ற மமதை யையும் வளர்க்கிறது.
- சைதன்யர்

ஆண்டவனே! நரகத்துக்குப் போய் விடுவேனோ என்று அஞ்சி உன்னை நான் துதித்திருந்தால் என்னை நரகத்தில் தள்ளிவிடு. சுவர்க்கம் செல்லலாம் என்ற ஆர்வத்துடன் உன்னை வணங்கியிருந்தால் சுவர்க்கத்தின் கதவை எனக்கு மூடிவிடு. பலன் ஒன்றும் எதிர்பாராமல் உன்னை வணங்கினேன் என்று கருதினால், என்னை உன் சந்நிதிக்கு அழைத்துக்கொள்.
- பாரசீகப் பெண்கவிஞர் ரூபியா

தம்முடைய கல்விச்சிறப்பு, குலப்பெருமை, செல்வம் ஆகியவை பற்றி மிகவும் அகந்தை கொண்டிருப்பவர் இறைவனது கருணையைப் பெறமாட்டார்கள்.
- கிருஷ்ண சைதன்யர்

கேடு வரும் சமயத்தில் அறிவு குழம்பிப் போகும். அநியாயம் நியாயமாகத் தோன்றும். நல்லவை எல்லாம் தீயவை போலவும், தீயவை எல்லாம் நல்லவை போலவும் தோன்றும்.
- மகாபாரதம் (சபா பர்வம்)

வெறும் வளர்ச்சி ஒருவனை மனிதனாக்குவதில்லை: சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது.
- ஐசக் டெய்லர்

துக்கமும் கஷ்டங்களும் சில சமயம் நேரிடுவது நம்முடைய இயற்கைக் குணங்களைப் பலப்படுத்தவேயாகும். அவை பரீக்ஷைகளேயாகும். நம்மைத் தயார் செய்துகொண்டு அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
- சுவாமி பரமானந்தர்

மக்களின் சுகதுக்கங்களைக் கவனிக்கும் பொருட்டு அரசாங்கங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறது. ஆனால் அரசாங்கங்கள் நடத்தும் கொள்ளையைப் போல், பெருங் கொள்ளைக்காரர்களுமே கொள்ளை அடிப்பதில்லை.
- டால்ஸ்டாய்

செல்வந்தர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரங்களுக்கு இருப்பிடம்.
-புத்தர்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.