பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால்...!
உ. தாமரைச்செல்வி.
 செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்றுதான் காப்பாற்ற இயலும்.
- ஜான்சன்
 பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே.
- ரஸ்கின்
 கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால், அதை அயோக்கியர்க்கு அளித்திருக்க மாட்டார்.
- ஸ்பிப்ட்
 செல்வம் இன்பம் தராது; சீதேவி அருள அருளச் சிந்தை அதிகமாக ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கும்.
- யங்
 பணத்தை வீணாக அழிப்பதை விட பணத்தில் பேராசை வைப்பதே மனிதனை நாசமாகச் செய்யும்.
- கோல்டன்
 பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்கும் கீழாயிருத்தலேயாகும்.
- தோரோ
 தாழ்ந்த விஷயங்களுக்குச சிந்தனையைப் பறிகொடுக்காமலிருப்பதன் மூலம், பணமில்லாமலே பணக்காரனாயிருப்பேன்.
- காலிங்வுட்
 செல்வனுக்கு வாரிசாகப் பிறப்பது உயிருடன் பிறப்பதன்று, இறந்து பிறப்பதேயாகும்.
- தோரோ
 நான் கண்டு களிப்பவைகள் எல்லாவற்றிற்கும் நானே அதிபன். என் உரிமையை மறுக்க யாராலும் இயலாது.
- தோரோ
 கவிஞன் ஒரு சோலையின் சிறந்த பயன்களை எல்லாம் நுகர்ந்து விடுகிறான். சோலையின் சொந்தக்காரனோ பழங்களையும், மட்டைகளையுமே வீட்டுக்குக் கொண்டு போகிறான்.
- தோரோ
 பெருமைப்படுத்திக் கொள்வதற்குச் செல்வத்தில் பிரமாதமாக ஒன்றுமில்லை.
- ஆவ்பரி
 செல்வம் சன்மார்க்கத்தில் அடையப்படவில்லை என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், உண்மையாதெனில் வறுமையும் சன்மார்க்கத்தில் அடையப்படுவது அபூர்வம் என்பதே.
- ஆவ்பரி
 நான் சேர்த்ததை இழந்தேன், செலவு செய்ததைப் பெற்றேன், கொடுத்ததை உடையேன்.
- டெவன்ஷேர்
 பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உள்ளது. அது யாதெனில், தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.
- டிஸ்ரேலி
 செல்வத்தை இகழ்பவனுக்குப் போல வேறெவர்க்கும் செல்வம் அவ்வளவு அதிகமாகத் தேவையாயிருப்பதில்லை.
- ரிக்டர்
 நான் லட்சுமிதேவியிடம் பிரார்த்திப்பதெல்லாம் நான் செலவு செய்ய வேண்டியதை விடச் சிறிது அதிகமாக அளித்தருள வேண்டும் என்பதே.
- ஹோம்ஸ்
 கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம்.
- ரஸ்கின்
 பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம்.
- ரஸ்கின்
 தவறான வழியில் லாபம் பெறாதே தவறான வழியில் பெறும் லாபம் நஷ்டமேயாகும்.
- ஹீலியாட்
 உண்மையான செல்வம் பணமன்று, குணமேயாகும்.
- ஆவ்பரி
 ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்?
- ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
 செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம்; இரண்டாவதாகவே பொருள்.
- ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
 எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை.
- ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
 நம்பவும் மகிழவும் உள்ள குணமே உண்மையான செல்வம். அஞ்சவும் வருந்தவும் உள்ள குணமே உண்மையான வறுமை.
- ஹயூம்
 செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. அது போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது.
- பெர்னார்ட்ஷா
 செல்வத்தோடு பிறப்பதில் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் இல்லாதது போலவே, சாமர்த்தியத்தோடு பிறப்பதிலும் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் கிடையாது. செல்வமும் சரி சாமர்த்தியமும் சரி, நன்றாய் உபயோகித்தால் மட்டுமே பெருமை தரும்.
- ஆவ்பரி
 அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும்.
- மில்ட்டன்
 செல்வம் வேண்டுமா? செல்வத்திலுள்ள ஆசையை விட்டுவிடு. அதுதான் செல்வத்தைப் பெருக்கும் வழி.
- அகஸ்ட்டைன்
 மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சில நாட்களுக்கே.
- கோல்ட்ஸ்மித்
 செல்வம் என்பது ஆன்மா எரிந்து மிகுந்த சாம்பலேயாகும்.
- பால் ரிச்சர்ட்
 துரதிர்ஷ்டத்தைத் தாங்குவதை விட அதிர்ஷ்டத்தைத் தாங்குவதே அதிகக் கஷ்டமான காரியம். பால் ரிச்சர்ட் செல்வம் என்பது சாத்தான் மனிதனை அடிமையாக்கும் சாதனம்.
- பால் ரிச்சர்ட்
 அசத்தியத்தை மறைக்கச் சத்தியத்தை நாடுவது போல், அசெளக்கியத்துக்கு வசதி செய்யவே செளக்கியத்தைத் தேடுகிறோம்.
- செஸ்ட்டர்டன்
 தனவந்தன் ஆரோக்கியமாயிருக்க வேண்டுமானால் தரித்திரனைப் போல் வாழவேண்டும்.
- டெம்பிள்
 ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும்.
- ரஸ்கின்
 செல்வம் போதுமான அளவாயிருந்தால் உன்னை அது தூக்கிச் செல்லும், அதிகமான அளவாய் விட்டால் நீ தான் அதைத் துக்கிச் செல்லவேண்டும்.
- ஸாதி
 பணம் தேடுவது முட்டாளுக்கு முடியும். ஆனால், அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும். அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அது போல் தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.
- கதே
 பணத்தை விட உயர்ந்தவை பலவுள. ஆனால் அவற்றைப் பெறப் பணமே தேவை.
- பழமொழி
 தனவந்தனாகச் சாவதை விடச் சான்றோனாக வாழ்வதே சிறப்பு.
- ஜாண்சன்
 உள்ளத்தில் லாப ஆசை இருக்கும் வரை கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய உண்மையான அறிவு உண்டாக முடியாது.
- ரஸ்கின்
 சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.
- கோல்ட்டன்
 பட்டுப்பூச்சி ஆடி ஓடிக் களிப்பதாகத் தோன்றும். ஆனால், அதே சமயத்தில் அது தன் உதரத்திலிருந்து நூல் நூற்றுத் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கும். அது போலவேதான் செல்வர்கள் சந்தோஷமாய் வாழ்வதாகத் தோன்றுவதும்.
- ஐஸக் வால்டன்
 ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். பணக்காரன் மட்டும் ஒருநாளும் கடவுள் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது.
- விவிலியம்
 அளவுக்கு மிஞ்சியதே அடிமைத்தளையாகும்.
- பால் ரிச்சர்ட்
 எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேட முடியுமேயன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது.
- ரஸ்கின்
 கடலில் நீர் பெருகும் சமயத்தில் சென்றால் நினைத்த இடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் தக்கச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.
- ஷேக்ஸ்பியர்
 அதிர்ஷ்ட தேவதையை நழுவ விட்டுவிட்டால் அவளை மறுபடியும் ஒருநாளும் காண முடியாமற் போய்விடும்.
- கெளலி
 அதிர்ஷ்டதேவதை அநேகர்க்கு அளவுக்கு அதிகமாக அருள்வதாகக் கூறுவர். ஆனால் அவளோ யார்க்கும் போதுமான அளவுகூட ஒரு பொழுதும் அளிப்பதில்லை.
- பழமொழி
 பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்; தவறான வழியிலேதான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும் பொழுதும் தீமையே பயக்கும்.
- ரஸ்கின்
 தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான்.
- ரஸ்கின்
 அதிர்ஷ்டதேவதை அதிகமாக அருள் செய்யப்போகும் பொழுது பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.
- ஷேக்ஸ்பியர்
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|