1. ஆண்டவனுக்குச் செய்யப்படும் பணி எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், அது மகத்தானப் பெருமைக்குரியது.
2. பகவானுடைய நாம சங்கீர்த்தனமே பக்தியின் மார்க்கமும் லட்சியமுமாகும்.
3. திலகம் இட்டுக் கொள்ளாத பக்தனின் நெற்றி, சவக்கிடங்குக்குச் சமமாகும்.
4. பக்தர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குப் பணியாற்றுவதற்குச் சமமாகும்.
5. மரத்தின் வேருக்குத் தண்ணீர் ஊற்றுவதன் மூலம், கிளைகளும் இலைகளும் வளர்ச்சி பெறுவது போல், விஷ்ணுவிடம் செலுத்தும் அன்பும் ஆராதனையும் மற்ற தெய்வங்களையும் சென்றடையும்.
6. நேர்மையும் தூய்மையும் நிறைந்த வாழ்க்கை நடத்தி, பகவானுடைய நாமங்களை உள்ளன்புடனும் பக்தி சிரத்தையுடனும் உச்சரிப்பதே சாலச் சிறந்தது.
7. இல்லங்கள்தோறும் பகவந்நாம சங்கீர்த்தனம் முழங்க வேண்டும். அப்போதுதான் உங்களை விட்டுப் பிரியாதவனாக நான் இருப்பேன்.
8. புலனுக்குத் தோன்றும் இந்த உலகம் யாவும் பிரம்மத்தின் மாயை தோற்றம்தான்.
9. பிரம்மம் பெரியது. எல்லாவற்றுக்கும் நாயகமானது, பலவித சக்திகளும் குணங்களும் பொருந்தியது.
10. ஜீவாத்மாவின் வரையறைக்குட்பட்ட சக்திகளுக்கு மாறாக, பிரம்மத்துக்கு ஆன்மிக இயல்புகள் உண்டு.
11. சர்வசக்தி வாய்ந்த இறைவனின் சக்தியே, உலகத்தின் தோற்றத்துக்குக் காரணம். உலக சிருஷ்டியில் அவர் எந்தவித மாறுதலையும் அடைவதில்லை. உலக சிருஷ்டி, அவருடைய சக்தியின் செயலே தவிர, அவர் அதில் சம்பந்தப்படுவதில்லை.
12. ஆத்மாவுடன் தங்கள் சரீரத்தை ஒன்றுபடுத்திக் காண்பவர்கள் தவறு செய்பவர்களே.
13. பரமாத்மா மாயையின் அதிகாரி; ஜீவாத்மாவோ மாயைக்கு உட்பட்டது; இதிலேயே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு அடங்கியிருக்கிறது.
14. பிரணவம் (ஓங்காரம்) ஈஸ்வரனின் உறைவிடம், பிரணவமே மகாவாக்கியம்.
15. வேதாந்தத்தின் தர்க்கபூர்வமான முடிவு, பகவானிடம் அன்பும் பக்தியும் கொள்வதே ஆகும்.
16. வெண்மையானத் துணியில் ஒரு துளி மை பட்டால் அதை எவ்வாறு மறைக்க முடியாதோ, அவ்வாறே சந்நியாசிக்கு ஏற்படும் சிறிய களங்கமும் எல்லோராலும் நிச்சயம் கண்டிக்கப்படும்.
17. உண்மையான எந்த வைஷ்ணவனையும் தீண்டாதவன் என்று கருதக் கூடாது.
18. தியானம்-நாம சங்கீர்த்தனம் போன்ற ஒன்பது வித மார்க்கங்களால், ஆண்டவனின் அருளை அடைய முடியும்.
19. தன்னுடைய அன்புக்குரிய பகவானின் நாமங்களை, ஆழ்ந்த பக்தியுடன் தீவிரமாகத் திரும்பத் திரும்பச் சொல்பவன், சில சமயங்களில் தானாகவே உரக்கச் சிரிப்பான்; அழுவான்; கூச்சலிடுவான்; பாடுவான்; சில வேளைகளில் நடனமாடுவான்; மானம், அபிமானம் இவற்றைப் பார்க்காத நிலையை அவன் அடைந்துவிடுவான்.
20. புல்லை விடத் தாழ்ந்தவர்கள், மரத்தை விடப் பொறுமை வாய்ந்தவர்கள், தற்பெருமை அற்றவர்கள், பிறருக்குரிய பெருமையைக் கொடுப்பவர்கள் இத்தகையவர்கள் திருமாலை என்றும் போற்றுவார்கள்.
21. செல்வம் வேண்டேன், மக்கள் வேண்டேன், அழகுக் கவிதையை வேண்டேன், இறைவா! ஆண்டவனாகிய உன்னிடத்தில் காரணம் கருதாத பக்தி எனக்கு ஏற்படட்டும்.