* கண்களைத் திறந்து உண்மையில் உலகம் என்பது என்ன? கடவுள் யார்? என்பதைப் பார். பொருளற்ற மயக்கம் தரும் கற்பனைகளுக்கு விடை கொடு. தான் வாழ வேண்டும் என்பதற்காகக் காலதேவன் கட்டியதுதான் இந்த உலகம்.
* சாவை உங்களால் ஒழிக்க முடியுமா? அப்போது வாழ்வு என ஒன்று இல்லாமல் மடிந்துவிடுமே! ஆகவே நீங்கள் மரணத்தை ஒழிக்க முடியாது. ஆனால் அதையே மகத்தான ஒரு வாழ்வாக மாற்றலாம்.
* உங்களால் அறியாமையையும் பிழையையும் ஒழிக்க முடியுமா? முடியாது. ஆயினும் அவற்றைச் சுடர்விடும் விவேகமாக உருமாற்ற முடியும்.
* மரணம் என ஒன்றில்லாமல் வாழ்க்கை என்பது மட்டும் இருக்கும் பட்சத்தில், அமரத்துவம் என்று ஒரு நிலை இருக்க முடியாது.
* கொடுமையே இல்லாமல் அன்பு மட்டுமே இருக்கும் பட்சத்தில், இன்பம் என்பது கானல் நீராகவே இருக்கும்.
* அறியாமையே இல்லாமல் பகுத்தறிவு மட்டுமே உள்ள பட்சத்தில் நம் சிந்தனை சக்தியும் உலக ஞானமும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறி விரிவடைந்து இருக்காது.
* உருமாற்றம் அடைந்த மரணமே வாழ்வு, அதுவே அமரத்துவம். உருமாறிய கொடுமையே அன்பு. அதுவே பேரின்பம், ரசாயன மாற்றம் அடைந்த அறியாமையே ஞானமும் அறிவும் கடந்த பேரொளியாம்.
* பொறுத்துக் கொள்வது எப்படி, இன்பத்தில் வளர்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுத்தரும் தாயின் மென்மையான ஸ்பரிசம்தான் வலி.
* மூன்று படிகளாக அவள் நமக்குப் பாடம் தருகிறாள் - சகிப்புத்தன்மை, ஆன்ம ஒருமைப்பாடு, பேரின்பம்.
* இந்திரியங்களைப் பொறுத்தவரை, சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் பகுத்தறிவு இதை ஏற்காது. பகுத்தறிவின் கண்களில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. இந்த உண்மையும் பரம்பொருளின் பார்வையில் அடிபட்டுப்போகும். பூமியும் சுற்றவில்லை. சூரியனும் சுற்றவில்லை. சூரியனை மையமாகக்கொண்ட உணர்வு, பூமியை மையமாகக் கொண்ட உணர்வு இந்தப் பார்வையில்தான் மாற்றம் நிகழ்கிறது.
* இயற்கையை ஒட்டி வாழ் என்கிறது மேலைக் கலாச்சாரம். ஆனால் எந்த இயற்கை என்று கூறவில்லை. உடலின் இயற்கையா? உடலைக் கடந்த இயற்கையா? இதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
* நான் அறியாமையில் இருந்த போது குற்றவாளியைப் பாவியென்றும் கெட்டவன் என்றும் வெறுத்தேன். நானே குற்றத்தையும் பாவத்தையும் ஒழுக்கக் கேட்டையும் சுமந்து கொண்டே அவ்வாறு செய்தேன்.
புனிதமடைந்து என் கண்கள் திறந்த பின் நான் திருடன், கொலைகாரன், தாசி ஆகியோர் முன் ஆத்மரீதியாகத் தலைகுனிந்து அவர்கள் பாதங்களை வணங்கினேன். உலகம் என்ற பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்படும் ஆலகால விஷத்தின் பெரும் பகுதியை துணிகரமாக விழுங்கி என்னை அத்தீங்குகளிலிருந்து இந்த ஆன்மாக்கள் காத்தன என்பதை உணர்ந்தேன்.