1. நீ உயர்வடைய வேண்டுமானால் உன்னை மிகவும் தாழ்ந்தவனாகவே எப்போதும் கருது; 'நான் மேலானவன்' என்ற நினைத்து கர்வம் கொள்ளாதே. சிறந்தவன் என்று எண்ணுகிற எண்ணத்தால் உயர்வடைய முடியாது. ஆதலால் உன் மனதில் எப்போதும் தாழ்மை இருக்கட்டும், பணிவு இருக்கட்டும்.
2. நீ தேடிய பொருளை வேறு ஊருக்குக் குடிமாறிப் போகும் போது உன்னுடன் கொண்டு போகிறாயன்றோ? இந்த உடம்பை விட்டு நீ புறப்படும் போது உன் செல்வம் உன்னுடன் வர வேண்டமா? வர வேண்டுமென்றால் தர்மம் செய்; 'எங்காயினும் வரும் ஏற்றவர்க்கு இட்டது.' பூஜை செய்யும் நேரம் உன்னுடைய நேரம்; தர்மம் செய்த பணம் உன்னுடையது; நீ செய்த அறம் கட்டமுது போல் உனது பெரிய யாத்திரையில் இனிது உதவுகிறது.
3. ''விபூதி தரிப்பதால் பாவத்திலிருந்து ஒருவன் விடுபடுகிறான். விபூதி தரிப்பதால் பூதப்பிரேத பிசாசு முதலியவை அஞ்சி நடுங்கி அலறியோடுகின்றன'' என்று மானவ புராணம் கூறுகிறது.
4. பிறருடைய உடைமையோ, உயிருள்ள பொருளோ நமக்கு எட்டிக்கனி போல் கசக்க வேண்டும். பிறர் பொருளை விரும்புதல் கூடாது. பிறகு தன் பொருளில் வைக்கும் பற்றையும் அறவே அகற்ற வேண்டும். இதுதான் பிறவிப் பிணியை மாற்றும் மார்க்கமாகும்.
5. வீரமும் புகழும் இல்லாமல் நெடுங்காலம் இருப்பதை விட, வீரமும் புகழும் பெற்றுச் சிறிது காலம் வாழ்வது சிறந்தது.
6. நீ வயலில் எந்த விதையை விதைக்கிறாயோ அந்த விதைதான் விளைந்து உன் வீட்டிற்கு வரும். கம்பை விதைத்துவிட்டு, கோதுமையை எதிர்பார்க்கக் கூடாது. கருவேலை நட்டுவிட்டு சந்தனமரத்தைப் பெற முடியாது. அதுபோல நீ நன்மை செய்தால் உனக்கு நன்மையே வரும். தீமையைச் செய்தால் தீமையை அனுபவிப்பாய்.
7. நீ பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. நன்மையும் செய்ய வேண்டும். வேம்பு, எட்டி, வேல் முதலிய மரங்களும் மருந்துக்கும் விறகுக்கும் பயன்படுகின்றன. எப்போதும் முடிந்த அளவில் பிறருக்கு உபகாரம் செய். மன வாக்குக் காயங்களால் ஒல்லும் வகையால் செய்.
8. ஆசையின்றி, பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது. மலரை நாடி வண்டுகள் வருவதுபோல் பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்.
9. உலகில் நன்றி கொன்றவன்தான் மிகவும் கொடியவன், நன்றி மறவாதவனே மிகவும் நல்லவன். உலகில் சிறந்த பொருள் அன்பு. தாழ்ந்தது தனக்கென்று யாசிப்பது.