* அதிகாலையில் எழுந்திரு.
* படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு.
* கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள்.
* கடவுளை வணங்கு.
* மந்திரத்தை நினை -ஜபம் செய்.
* காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள்.
* உடனே குளித்து விடு.
* ஆலயத்திற்கு செல்.
* தெய்வ வழிபாடு செய்.
* பின்னர் உன் தொழிலைக் கவனி.
* தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள்.
* நியாய முறையில் பொருளைத் தேடு.
* அநியாயத்தை மனத்திலும் கருதாதே.
* உலகத்தோடு ஒத்து வாழ்.
* உன்னைப் போல் மற்றவரையும் நினை.
* எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே.
* மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே.
* புகழோடு வாழ்.
* பகைவரிடத்திலும் இனிமையாகப் பேசு.
* எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
* எவரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
* அனைவரிடத்தும் முக மலர்ச்சியுடன் பேசு.
* நல்லவரைப் பின்பற்றுக.
* நல்லவர் சொற் கேள்.
* நல்லவர் போன வழி நீயும் போகுக.
* நல்லோரைக் காண்பதுவும் நன்றே.
* நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க.
* பெரியோரிடத்தில் வணக்கமாய் இரு.
* பெரியோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே.
* பெரியோர் பேச்சைக் கேள்.
* பெரியோரைக் கண்டால் தாழ்மையுடன் நட
* பெரியோர் வார்த்தையை மீறாதே
* பெரியோர் சொற்படி நட.
* தீயோருடன் சேராதே.
* தீயோர் சொற்களைக் கேட்காதே.
* தீயோருடன் பழகாதே.
* தீயோரைக் கண்டால் தூர நட
* தீயோரைக் காண்பதும் தீதே.
* தீது செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் தீதே.
* தர்மம் செய்க.
* தர்மத்தைப் பேணிக் காக்க.
* புண்ணியம் செய்க.
* பாபத்தைச் செய்யாதொழிக.
* இறைவனை (சுவாமியை) வழிபடுக.
* குருக்களை வணங்குக.
* அற நூல்களை ஓதுக.
* கொலை செய்யாதே.
* பொய் பேசாதே.
* கொல்லானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்.
* திருடாதே (களவு செய்யாதே).
* ஐம்புலனை அடக்குக.
* பிரம்மசர்ய விரதம் காக்க.
* பொருள் மீது பேராசைப் படாதே.
* பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் இரு.
* நீ மனிதனாக இரு.
* நீ மனிதனாக வாழ்க.
* விலங்கு இனத்தைச் சேர்ந்தவனாக வாழாதே.
* பகுத்தறிவுள்ளவனாக வாழ்க.
* பொறாமைப்படாதே.
* கோபத்தை அடக்குக.
* கர்வங் கொள்ளாதே.
* வஞ்சனை செய்யாதே.
* கபடம் செய்யாதே.
* பிறருக்குக் கொடுத்து வாழ்தலைக் கற்க.
* லோபத்தை விடுக.
* அன்னமிட்டுண் (அன்னதானம் செய்)
* அபய தானம் செய்.
* கல்விக்கு உதவி செய்.
* பிறர் பிணி நீக்குக.
* பிறர் நலம் கருதுக.
* தன்னலம் கருதாதே.
* பிறரை இகழாதே.
* தற்புகழ்ச்சி செய்யாதே.
* எல்லோரிடத்திலும் நேசமாயிரு.
* எவ்வுயிரையும் துன்புறுத்தாதே.
* யாருக்கும் கெடுதி செய்யாதே.
* பிற உயிருக்கு இன்னலை நினைக்காதே.
* பிறருக்குக் கெடுதியுண்டாவதைப் பற்றிப் பேசாதே.
* ஊன் உண்ணாதே.
* ஊன் உண்பது மனித இயல்பல்ல.
* ஊன் உண்பது கொடிய விலங்கின் செயல்.
* கள் குடிக்காதே.
* கள் மயக்கத்தைத் தரும்.
* கள் அறிவைக் கெடுக்கும்.
* கள் மனித இயல்பைக் கெடுக்கும்.
* கள்ளைக் கனவிலும் கருதாதே.
* களவையும் கனவில் நினைக்காதே.
* பிறர் பொருளை விரும்பாதே.
* பிறர் மனை நயவாதே.
* சூதாடாதே.
* வேசியை நேசிக்காதே.
* விபச்சாரியை விரும்பாதே.
* குருபத்தினியைக் கருதாதே.
* கன்னியைக் கெடுக்காதே.
* குலமாதரைக் கெடுக்காதே.
* மாதாவைத் தெய்வமாக நினை
* செய்ந்நன்றி மறவாதே.
* பித்ரு துரோகம் நினைக்காதே.
* தாயாதி துரோகம் நினைக்காதே.
* அண்டினவரைக் காப்பாற்றுக.
* பிராணிகளை வதைக்காதே.
* பிராணிகளின் காது முதலானவற்றை அறுத்துத் துன்புறுத்தாதே.
* பிராணிகளை அடிக்காதே.
* பிராணிகளுக்குச் சரியான வேளையில் தீனி வைக்காமல் கட்டிப் போடாதே.
* காலந் தவறி தீனி வைக்காதே.
* காலந்தவறி தண்ணீர் காட்டாதே.
* வண்டிகளில் (பொதிமாடுகளின் மீது) அதிகச் சுமை ஏற்றாதே.
* மாடுகள் வண்டியிழுக்க சக்தியற்றவையாயிருப்பின் வண்டியைத் தள்ளி உதவி செய்.
* உதவி செய்யாமல் அடிக்காதே.
* பசுங்கன்றுக்குப் பால் விடு.
* பாலை அடியோடு கறக்காதே.
* கன்றுகளைக் காப்பாற்று; உழவுக்கு உதவும்.
* வயதான மாட்டை ஊன் உணவுக்கு விற்காதே.
* உழைத்த உயிர் நீங்கிய மாட்டை ஓரிடத்தில் புதைத்து விடு.
* பொய்ப் பிரசாரம் செய்யாதே.
* பிறருக்கு துன்பம் ஏற்படும் சொல்லைச் சொல்லாதே.
* உண்மையற்றதை உலகில் பரப்பாதே.
* ஆண் பெண் சம்பந்தமான ரகசியத்தை வெளியிடாதே.
* ரகசியத்தை அறிந்தாலும் அறியாமலிருந்து விடு. வெளியிடாமல் இருந்துவிடு.
* பிறர் பொருளை அபகரிக்காதே.
* உன்னிடம் பிறர் இருப்பு வைத்த பொருளை அவர் மறந்து விடினும் அதனைக் திருப்பிக் கொடுத்து விடு.
* பிறர் பொருளை அபகா¢க்கக் கனவிலும் கருதாதே.
* தன்னுடையதல்லாதவற்றை யாருடையதென்று விசாரித்து அவருக்குக் கொடுத்து விடு.
* அரசு ஆணையை மீறாதே.
* அரசு சட்டப்படி நட
* அரசுக்கு அடங்கி நட.
* அரசை அவமதிக்காதே.
* அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
* பாலில் நீரைக் கலந்து விற்காதே.
* தான்யத்தில் மண்ணையும் கல்லையும் கலந்து விற்காதே.
* அதிக விலையுள்ள பொருளில் குறைவான விலையுள்ள பொருளைக் கலந்து விற்காதே.
* அழுகிய பொருளை அகற்றி விடு. அதனைக் கலந்து விற்காதே.
* வாங்கும்போது அதிக நிறுத்தலில் வாங்காதே.
* விற்கும் போது குறைவான நிறுத்தலில் விற்காதே.
* விலையைக் குறைத்தாலும் குறை அளவைக் குறைக்காதே.
* அளவை மத்யஸ்தமாக அளத்தல் வேண்டும்.
* வாங்கும்போது அதிக அளவில் வாங்காதே.
* விற்கும்போது குறைந்த அளவில் விற்காதே.
* திருட்டுப் பொருளை வாங்காதே.
* சட்டத்திற்கு மீறி நடக்காதே.
* பொருள்களை மிதமாக வைத்துக் கொண்டு வாழ்க.
* அதிகமான பொருள்களைச் சேர்த்து வைக்காதே.
* உன் தேவைக்கு அளவான பொருள்களைச் சம்பாதித்துக் கொள்.
* அதிகமான பொருள்களை நீயே பொருளற்றவர்கட்குப் பங்கிட்டுக் கொடு.
* எதிலும் அதிக ஆசைப் படாதே.
* ஜாதி குல முறைப்படி மணம் செய்து கொள்.
* மணம் செய்து கொண்ட மனைவியுடன் ஒத்து வாழ்.
* மனைவி மனம் நோக எதையும் செய்யாதே.
* தன் மனைவியிருக்க பிறர் மனைவியைச் சேராதே.
* வேசியின் உறவு கொள்ளாதே.
* புணர்ச்சி செய்வதில் அதிக ஆவல் கொள்ளாதே.
* புணர்ச்சி செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளாதே.
* மக்களைப் பெறுதற்கு மிதமாகப் புணர்தல் வேண்டும்.
* புணர்ச்சி செய்வதற்குரிய அங்கத்தில் புணர்தல் வேண்டும்.
* புணர்ச்சிக்குரிய காலத்தில் (இரவில்) புணர்தல் வேண்டும்.
* பகலில் புணர்ச்சி செய்யாதே.
* உறவினரை உள்ளன்போடு நேசி.
* உறவினருக்கு உன்னால் இயன்ற உதவி செய்.
* உறவினருக்கு விருந்தளி.
* விருந்தினரிடம் முகமலர்ந்து பேசு.
* உபசரித்து உள்ளங்களித்து உப்பிலாக் கூழிட்டாலும் உண்பது அமிர்தமாகும்.
* முகங்கடிந்து முப்பழமொடு பால் கொடுப்பினும் கடும்பசி யாகும்.
* வீட்டிற்கு வந்தவரை வாவென்று அழைக்காமல் இராதே.
* பிறருக்குக் கொடுப்பதில் உன்னிடம் உள்ளதை நல்ல எண்ணத்துடன் மறைக்காதே
* பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படாதே.
* உலகில் நல்லவனாக வாழ்க.
* கெட்டவனென்று பேரெடுக்காதே.
* உலகுக்கு உதவியாளனாக வாழ்.
* உலகத்தார் விரும்பாத செயலைச் செய்யாதே.
* உன்னுடைய வாழ் நாட்களை நல்லபடியே கழி.
* வாலிபத்தில் எவ்விதமாயினும் வாழ்ந்து விடலாம். முதுமையில் வாழ இயலாது.
* முதுமையில் உறவினருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்.
* பெண்கள் தனித்து வாழ்தல் கூடாது.
* பெண்கள் இளமையில் தந்தை தாயின் அடக்கத்தில் இருத்தல் வேண்டும்.
* பெண்கள் வாலிபத்தில் கணவனுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
* பெண்கள் முதுமையில் மக்களுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
* மக்கள் இளமையில் நன் முறையில் இருக்க வேண்டும்.
* மக்கள் மறுமையில் சுகத்துடன் வாழ முயல வேண்டும்.